அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை விதி 110 - ன்கீழ் வெளியிட்டு , தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை
- அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்காலத்தில் தேவை அடிப்படையில் திருமண முன் பணம் தொகை 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்
- பொங்கல் போனஸ் சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியம் ஆயிரமாக உயர்வு
- மகப்பேறு விடுப்பு காலங்கள் பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்
- பழைய ஓய்வூதியம் திட்டம் தொடர்பாக ஆராயும் குழு செப்டம்பர் மாதம் அறிக்கை சமர்ப்பிக்கும்
- அரசு ஊழியர்கள் குழந்தைகள் உயர்கல்விக்கு தொழில்நுட்பக் கல்லூரிக்கு ரூ. 1 லட்சம்
- முதல்வர் ஸ்டாலின்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை விதி 110-ன்கீழ் வெளியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை
*முதல் அறிவிப்பு;
கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்திலே, அரசின் நிதிநிலையின் மீது ஏற்பட்ட பெரும் சுமையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை, 01.04.2026 முதல், 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் வகையில் மீண்டும் செயல்படுத்திட 2025-2026-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இருந்தாலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த அறிவிப்பை, இந்த ஆண்டே செயல்படுத்திட கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுடைய கோரிக்கையைப் பரிசீலித்து, ஈட்டிய விடுப்பு நாட்களில், 15 நாட்கள் வரை 1.10.2025 முதல் சரண் செய்து பணப்பயன் பெறலாம் என்பதை இந்த அவையில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) இந்த அறிவிப்பின்படி, சுமார் 8 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள். இந்த அறிவிப்பினைச் செயல்படுத்திட ஆண்டு ஒன்றுக்கு 3 ஆயிரத்து 561 கோடி ரூபாய் கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.
இரண்டாவது அறிவிப்பு:
01-01-2025 முதல் 2 விழுக்காடு அகவிலைப்படியினை ஒன்றிய அரசு அலுவலர்களுக்கு உயர்த்தி வழங்கிட அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், மாநில அரசுப் பணியாளர்களுக்கும் 01-01-2025 முதல் அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வினை நடைமுறைப்படுத்திட ஆண்டு ஒன்றுக்கு 1252 கோடி ரூபாய் கூடுதல் நிதி செலவிடப்படும்.
மூன்றாவது அறிவிப்பு:
அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அவர்களுடைய குடும்பத்தினருடன் பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில், ஏற்கெனவே இதுவரை வழங்கப்பட்டு வரும் பத்தாயிரம் ரூபாய் பண்டிகை கால முன்பணம் தற்போது இருபதாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி) இதனால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 இலட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.
நான்காவது அறிவிப்பு;
அரசுப் பணியாளர்களுடைய குழந்தைகள் உயர்கல்வி பயில்வதில் இந்த அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இந்த அடிப்படையில், அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் இந்த ஆண்டிலிருந்து தொழிற்கல்வி பயில ஒரு இலட்சம் ரூபாயாகவும், கலை மற்றும் அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் பயில ஐம்பதாயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி) இந்தக் கல்வி முன்பணம் உயர்வால் தங்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில விரும்பும் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.
ஐந்தாவது அறிவிப்பு:
அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், தமது பணிக்காலத்தில் தேவையின் அடிப்படையில் திருமண முன்பணமாக இதுவரை பெண் ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் மற்றும் ஆண்களுக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை பலமடங்கு உயர்த்தி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவாக ஐந்து இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)
ஆறாவது அறிவிப்பு:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முன்னாள் கிராமபணியமைப்பு உட்பட C மற்றும் D பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்துக் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசுத் தொகை ஐந்நூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக இனி உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி) இந்த உயர்வால் சுமார் நான்கு இலட்சத்து எழுபத்து ஓராயிரம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் அரசிற்கு ஏற்படும் கூடுதல் செலவினம் சுமார் 24 கோடி ரூபாயாக இருக்கும்.
ஏழாவது அறிவிப்பு:
ஓய்வூதியதாரர்கள் அவர்தம் குடும்பத்தினருடன் பண்டிகையைச் சிறப்பாக கொண்டாடிட, தற்போது வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம், நான்காயிரம் ரூபாயிலிருந்து ஆறாயிரமாக உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி) இந்த உயர்வால், சுமார் 52 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இதனால் பத்து கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.
எட்டாவது அறிவிப்பு:
அண்மையில், பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்து, அந்தக் குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரையை ஒன்பது மாதங்களுக்குள் சமர்ப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது. பல்வேறு அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில், இந்தக் குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரையை செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் சமர்ப்பித்திட அறிவுறுத்தப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)
ஒன்பதாவது அறிவிப்பு;
திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறுக்காக ஒன்பது மாத காலமாக இருந்த விடுப்பை 01.07.2021 முதல் ஓராண்டு காலமாக உயர்த்தப்பட்டு, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது உள்ள விதிகளின்படி மகப்பேறு விடுப்பு காலம் தகுதிகாண் பருவத்திற்கு (Probation period) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
இதன் காரணமாக அரசு பணிகளில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான இளம் மகளிர் மகப்பேறு விடுப்பு எடுத்தால். தகுதிகாண் பருவம் உரிய காலத்திற்குள் முடிக்க இயலாமல் அவர்களுடைய பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், பணிமூப்பினை இழக்கும் நிலையும் ஏற்படுகிறது.
மகளிர் முன்னேற்றத்திற்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரும் இந்த அரசு, அரசுப் பணிகளில் பணியாற்றிவரும் மகளிரின் பணி உரிமைகளை பாதுகாக்கும் வகையில், இனிவரும் காலங்களில் அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்புக் காலத்தினை அவர்களது தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளது.
Click Here to Download - விதி 110 - ன்கீழ் முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - செய்தி வெளியீடு - Pdf
No comments:
Post a Comment