முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டசபையில் எங்களது வேண்டுகோளை ஏற்று 9 அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். பண்டிகைக்கால முன்பணம் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். அரசு ஊழியர்களின் திருமணத்திற்கான முன்பணம் கடன் தொகையாக ரூ.5 லட்சம் வரை உயர்த்தி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 9 அறிவிப்புகளை நாங்கள் மனதார வரவேற்கிறோம் என்று கூறிய தொழிற்கல்வி ஆசியர்கள், கையோடு வைத்த கோரிக்கை பற்றி பார்ப்போம்.
அவை விதி 110-ன் கீழ், முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்காக 9 அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், "கொரோனா காலத்தில் அரசின் நிதிநிலையின் மீது ஏற்பட்ட பெரும் சுமையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை, 1.4.2026 முதல் 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் வகையில் மீண்டும் செயல்படுத்திட 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பை இந்த ஆண்டே செயல்படுத்தும்படி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதை பரிசீலித்து ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை 1.10.2025 முதல் சரண் செய்து பணப்பயன் பெறலாம். இதன்படி 8 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ.3,561 கோடி கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.
1-2025 முதல் 2 சதவீத அகவிலைப்படியை மத்திய அரசு அலுவலர்களுக்கு உயர்த்தி வழங்க அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், மாநில அரசுப் பணியாளர்களுக்கும் 1-1-2025 முதல் அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும். இதனால் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ.1,252 கோடி கூடுதல் நிதி செலவிடப்படும்.
அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ஏற்கனவே இதுவரை வழங்கப்பட்டு வரும் ரூ.10 ஆயிரம் பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இதனால் 8 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.
அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் இந்த ஆண்டிலிருந்து, தொழிற்கல்வி பயில ஒரு லட்சம் ரூபாயாகவும், கலை மற்றும் அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் பயில ரூ.50 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், தமது பணிக்காலத்தில் தேவையின் அடிப்படையில் திருமண முன்பணமாக இதுவரை பெண் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் ஆண்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதுஅனைவருக்கும் பொதுவாக ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
பொங்கல் பண்டிகைக்கு முன்னாள் கிராம பணியமைப்பு உள்பட சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்துக் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசுத்தொகை ரூ.500-ல் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதனால் 4.71 லட்சம் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இதனால் அரசிற்கு ரூ.24 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம், ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இதனால் 52 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். அரசுக்கு ரூ.10 கோடி கூடுதலாக செலவாகும்.
பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவை பற்றி விரிவாக ஆராய ஒரு குழு அமைத்து, அதன் பரிந்துரையை 9 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது. அரசு அலுவலர், ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையின்படி, இந்தக் குழு தனது பரிந்துரையை வரும் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படும்.
திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறுக்காக 9 மாத காலமாக இருந்த விடுப்பை 1.7.2021 முதல் ஓராண்டு காலமாக உயர்த்தப்பட்டது. தற்போது உள்ள விதிகளின்படி, மகப்பேறு விடுப்பு காலம் தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படுவதில்லை.
இதனால் பல்லாயிரக்கணக்கான இளம் மகளிர் மகப்பேறு விடுப்பு எடுத்தால், தகுதிகாண் பருவம் உரிய காலத்திற்குள் முடிக்க இயலாமல், பதவி உயர்வு பாதிக்கப்பட்டு, பணிமூப்பை இழக்கும் நிலை ஏற்படுகிறது. இனிவரும் காலங்களில் அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்புக் காலத்தை அவர்களது தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இதற்கு தொழிற்கல்வி ஆசிரியர்கள் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
ஜாக்டோ- ஜியோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும், தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவருமான செ.நா.ஜனார்த்தனன் வேலூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டசபையில் எங்களது வேண்டுகோளை ஏற்று 9 அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். பண்டிகைக்கால முன்பணம் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். அரசு ஊழியர்களின் திருமணத்திற்கான முன்பணம் கடன் தொகையாக ரூ.5 லட்சம் வரை உயர்த்தி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 9 அறிவிப்புகளை நாங்கள் மனதார வரவேற்கிறோம்.
மேலும், மெல்ல கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு நடைமுறைப்படுத்த வேண்டும். மிக முக்கிய கோரிக்கையான, பழைய ஓய்வூதிய திட்டம் செப்டம்பர் மாதம் அறிக்கை பெற்று நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்"
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment