''புதிதாக 1,915 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 1,205 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
சட்டசபையில் அவர் கூறியதாவது:
கடந்த நான்கு ஆண்டுகளில், 3,087 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளோம். 3,192 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துள்ளது.
இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், பணி நியமனம் தாமதமாகிறது. வழக்கை முடித்து, விரைவில் அவர்களை பணியில் அமர்த்த உள்ளோம்.
கடந்த 11 ஆண்டுகளுக்கு பின், 2,868 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது.
இந்த ஆண்டு, 1,915 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 1,205 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளோம். கடந்த மார்ச் 1 முதல் நேற்று வரை, 1 லட்சத்து 56,290 பேர் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
பகுதி நேர ஆசிரியர்களை, முழு நேர ஆசிரியர்களாக மாற்றும் கோரிக்கை தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார்.
'நீட்' தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்பது தி.மு.க., அரசின் கொள்கை. நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டப் போராட்டத்தில் வெல்வோம். அதுவரை, நீட் தேர்வில் வெற்றி பெற, அரசு பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி தொடரும்.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் தயாரித்த நீட் தேர்வு மாதிரி வினாத்தாளில் இருந்து, கடந்த ஆண்டு 400 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் வந்திருந்தன. அரசு பள்ளிகளின் திறமைக்கு இது சான்று.
மாணவர்கள் சார்ந்த திட்டங்களில், நாங்கள் அரசியலை பார்க்கவில்லை. பள்ளிக்கல்வி துறையில் தி.மு.க., அரசு 67 திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment