திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் ஆயிரக்கணக்கில் மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், எண்ணும் எழுத்தும், வாசிப்பு இயக்கம், கலைத்திருவிழா, கோடைக் கொண்டாட்டம், சிறார் திரைப்பட விழா, நம் பள்ளி நம் பெருமை, நம்ம ஊரு பள்ளி, வானவில் மன்றம், முதல்வரின் காலை உணவுத்திட்டம், தமிழ் மொழி திறனறிவு தேர்வு, மணற்கேணி, தமிழ்க்கூடல், முதல்வர் திறனறிவு தேர்வு, பள்ளி மேம்பாட்டு திட்டம், சிற்பி திட்டம், தலைமைத்துவ விருது உட்பட, 57 திட்டங்கள் நடைமுறையில் உள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு திட்டங்களிலும், மாணவர்கள் மற்றும் பெற்றோரை முழு அளவில் ஈடுபடுத்தி, அரசுப் பள்ளிகளின் பெருமையை பிரபலப்படுத்தவும், அதன் வாயிலாக மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் முனைப்பு காட்டப்படுகிறது.
பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை அரசுப்பள்ளி ஆசிரியர்கள் செயல்படுத்தி வருகின்றனர்; இது, நல்ல பலனை தருகிறது. ஆசிரியர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் தொய்வு தென்படுகிறது.
அரசுப்பள்ளிகளில் கல்வித்தரம், விளையாட்டு உள்ளிட்டவை நன்றாகவே இருக்கிறது; ஆனால், கட்டமைப்பு தான் கவலையளிக்கும் வகையில் இருக்கிறது. கல்வி மேலாண்மைக்குழு கூட்டங்களில் பெரும்பாலான பெற்றோர், இக்கருத்தை முன்வைக்கின்றனர்.
அரசுப்பள்ளிகளை பிரபலப்படுத்த, அரசு, பல திட்டங்களை அறிவித்து வரும் நிலையில், பள்ளிகளின் கட்டமைப்பு, கழிப்பறை, விளையாட்டு மைதானம், குடிநீர் வசதி போன்றவற்றை மட்டும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றினால் போதும்; நிச்சயம் அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும். மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிப்பதும் அவசியம். வரும் கல்வியாண்டில், இவ்விஷயத்தில் அரசு கவனம் செலுத்தும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
'காகித' திட்டங்கள்
அரசுப்பள்ளிகளில் ஏராளமான திட்டங்கள் இருந்தும், அதை செயல்படுத்த போதியளவு ஆசிரியர்கள், ஊழியர்கள் இல்லை. துப்புரவு பணியாளர்கள் முதற்கொண்டு, எழுத்தர் பணி வரையிலான பல பணியிடங்கள் காலியாக இருப்பதால், அவர்கள் செய்ய வேண்டிய பணியையும், ஆசிரியர்களே மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
எனவே, பெரும்பாலான அரசு திட்டங்கள் காகித அளவில் மட்டுமே உள்ளன. தேவைக்ககேற்ப ஆசிரியர், ஊழியர் பணியிடங்களை நிரப்பினால் மட்டுமே அரசு திட்டங்கள் முழு பலன் தரும்.- சுந்தரமூர்த்தி, மாநில தலைவர், தமிழ்நாடு விடியல் ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.
No comments:
Post a Comment