10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சிபெறும் அரசுப் பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் நேற்று பள்ளி கல்வித்துறைக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அத்துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அரசுப் பள்ளிகளில் 6 - 8ம் வகுப்பு பயிலும் 13 லட்ச மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்தும் வகையில் 'திறன் எண்ணும் முனைப்பு இயக்கம்' ரூ.19 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
கலைத்திருவிழாப் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்குக் "கலைச்சிற்பி" என்ற தலைப்பில் கோடைக்கால சிறப்பு முகாம் நடத்தப்படும். தொழிற்பயிற்சி நிலைய ஆய்வகங்கள் வழியாக 12,000 மாணவர்களுக்கு ரூ.13 கோடி மதிப்பீட்டில் திறன் பயிற்சி அளிக்கப்படும்.
10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சிபெறும் அரசுப் பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். 13 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும், 38 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.
மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தனியார் சுயநிதி மற்றும் பிற வாரியப் பள்ளிகளில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர்களுக்கு ரூ.4.94 லட்சம் மதிப்பீட்டில் பயிற்சி வழங்கப்படும்.
ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அரசின் துறைத் தேர்வுகளுக்கான நூல்கள் வெளியிடப்படும். ரூ.30 கோடி மதிப்பீட்டில் நூலகக் கட்டடங்கள் மறுகட்டமைப்பு செய்யப்படும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கருத்தரங்கக்கூடம் அமைக்கப்படும். இசைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கை பெறும் வகையில், 10,12ம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும்."
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment