'தனித்தேர்வராக தமிழ் வழியில் மேல்நிலைக் கல்வி முடித்தவர்களுக்கும், தமிழ் வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீட்டின் பலனை நீட்டிக்க, அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் ஆமூர் தீபா என்பவர், ஏற்கனவே தாக்கல் செய்த மனு:
குரூப் - 2 ஏ தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., 2022 பிப்., 23ல் வெளியிட்டது; விண்ணப்பித்தேன்.
முதல்நிலை மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வில் பங்கேற்றேன். பரிசீலனைக்குரியவர்களின் பட்டியலில் என் பெயர் இருந்தது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கவில்லை.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை அளித்து, தமிழக அரசு 2021ல் அரசாணை வெளியிட்டது.
முதல் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை தமிழ் வழியில் படித்ததற்கு தலைமையாசிரியர்களிடம் இருந்து பெற்ற சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளேன்.
முதுகலை பட்டப் படிப்பு சான்றிதழை சமர்ப்பித்துள்ளேன். தமிழ் வழியில் படித்ததற்குரிய சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை எனக்கூறி என் பெயர் நிராகரிக்கப்பட்டது. அதை ரத்து செய்து, தமிழ் வழியில் படித்தோருக்குரிய சலுகை அளிக்க பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
தனி நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா விசாரித்தார்.
டி.என்.பி.எஸ்.சி., தரப்பு: மனுதாரர் பிளஸ் 2 தேர்வை தனித்தேர்வராக, பள்ளி செல்லாமல் நேரடியாக எழுதியுள்ளார். 'எந்தவொரு தேர்வையும் தனித்தேர்வராக எழுதியோர் நிராகரிக்கப்படுவர்' என டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பில் உள்ளது. அதன்படி அவரின் பெயர் நிராகரிக்கப்பட்டது.
இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதி: மனுதாரரரை நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவரை சான்றிதழ்
சரிபார்ப்பிற்கு அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் மேல்முறையீடு செய்தார்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு:
தீபா, தமிழ் வழியில் படித்தோருக்குரிய பிரிவின் கீழ் அடுத்தகட்ட தேர்வில் பங்கேற்க தனி நீதிபதி அனுமதித்தார்.
தனித் தேர்வர்களாக தமிழ் வழியில் படித்து மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்தால் தகுதியுடையவர்கள் என ஏற்கனவே ஒரு வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவ்வழக்கில் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து விட்டது. சிறைத்துறையில் உதவியாளர் பணியை தீபா தேர்வு செய்துள்ளார். இவ்வழக்கு நிலுவையால் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு டி.என்.பி.எஸ்.சி., தரப்பு தெரிவித்தது.
அமர்வு பிறப்பித்த உத்தரவு:
தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. தேர்வானோரின் இறுதிப் பட்டியலில் தகுதி அடிப்படையில் தீபாவின் பெயரை இடம்பெறச் வேண்டும்.
தனித்தேர்வராக தமிழ் வழியில் மேல்நிலைக் கல்வி படிப்பை முடித்த விண்ணப்பதாரர்களுக்கும் இட ஒதுக்கீட்டின் பலனை நீட்டிக்கும் அரசாணையை, தமிழக மனிதவள மேலாண்மைத்துறை முதன்மைச் செயலர் பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment