கலெக்டரிடம் வசமாக சிக்கிய மாணவன் - பெற்றோருக்கு அபராதம் விதிக்க அதிரடி உத்தரவு - Asiriyar.Net

Friday, December 20, 2024

கலெக்டரிடம் வசமாக சிக்கிய மாணவன் - பெற்றோருக்கு அபராதம் விதிக்க அதிரடி உத்தரவு

 



நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே பள்ளிக்கு செல்ல டூவீலரில் வந்த மாணவனை தடுத்து நிறுத்தி ஆய்வு செய்த கலெக்டர், அவனது பெற்றோருக்கு அபராதம் விதித்து வாகனத்தை பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 


தமிழக அரசின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகாவில் கலெக்டர் உமா நேற்று காலை முதல் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.


நாமகிரிப்பேட்டை அருகே தொப்பம்பட்டி பகுதியில் ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, பள்ளி மாணவன் டூவீலர் ஓட்டிச் சென்றதை கண்டு திடுக்கிட்டார். உடனே, அவனை தடுத்து நிறுத்தி விசாரித்தார். 


டூவீலர் ஓட்டுவதற்கு உரிமம் உள்ளதா என மாணவனிடம் கேட்டார். அதற்கு, இல்லை என கூறியதால், வாகனத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். அந்த வாகனத்தை அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்குமாறும், மாணவனின் பெற்றோருக்கு அபராதம் விதிக்குமாறும் உத்தரவிட்டார்.


மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டங்கள் குறித்து மாணவனுக்கு அறிவுரைகள் வழங்கி, 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களும் வாகனத்தை இயக்கக் கூடாது என தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறையின் மூலம் அரசு வழங்குகிற சலுகைகள் குறித்தும் மாணவனுக்கு விளக்கி பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.


No comments:

Post a Comment

Post Top Ad