ID Card இன்றி வரும் அரசு ஊழியர்கள் ஜன., 1 முதல் திருப்பி அனுப்ப முடிவு - Asiriyar.Net

Saturday, December 28, 2024

ID Card இன்றி வரும் அரசு ஊழியர்கள் ஜன., 1 முதல் திருப்பி அனுப்ப முடிவு

 



உரிய அடையாள அட்டையின்றி அலுவலகங்களுக்கு வரும் அரசு ஊழியர்களை, ஜன., 1ம் தேதி முதல் திருப்பி அனுப்ப, போலீசார் முடிவு செய்துள்ளனர்.


தமிழகத்தில், 16 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். தலைமை செயலர் முதல் குக்கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் வரை, பணியின் போது அடையாள அட்டையை கழுத்தில் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். தேவைப்படும் போது, தொடர்புடைய அதிகாரிகளிடம் அதை காண்பிக்க வேண்டும் என, மனிதவள மேலாண்மை துறை வாயிலாக, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.


இதற்கென முகாம்கள் நடத்தி புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை, மனிதவள மேலாண்மை துறை வழங்கியுள்ளது. ஆனால், இந்த உத்தரவை, அரசு ஊழியர்கள் பெரும்பாலானவர்கள், முறையாக கடைபிடிப்பது இல்லை.


உயர் அதிகாரிகளும் அடையாள அட்டை அணிவது கிடையாது.


தலைமை செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், வெளியே பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாரிடம், தங்கள் அடையாள அட்டையை காண்பித்து விட்டு செல்ல வேண்டும். ஆனால், அடையாள அட்டையை காண்பிக்காமல், பணிக்கு வேகமாக பலரும் செல்கின்றனர்.


இதை தட்டிக் கேட்கும் போலீசாரிடம், சில அரசு ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதை பயன்படுத்தி, கோரிக்கை தொடர்பாக வரும் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர், உரிய ஆவணங்களை காட்டாமல் உள்ளே சென்று, போராட்டத்தில் ஈடுபடும் சம்பவங்களும் நடக்கின்றன.


பல்வேறு துறைகளின் தலைமை அலுவலகங்கள் இயங்கும் சேப்பாக்கம் எழிலகம், நந்தனம், சைதாப்பேட்டை உள்ளிட்ட வளாகங்களிலும், இதேபோன்று பிரச்னை ஏற்படுகிறது. எனவே, மனிதவள மேலாண்மை உத்தரவை முழுமையாக பின்பற்ற தேவையான நடவடிக்கையை எடுக்கும்படி, போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.


அரசு அதிகாரிகள் உரிய உத்தரவு பிறப்பிக்காத பட்சத்தில், முழுமையாக நடைமுறைப்படுத்த போலீசார் தயாராகி வருகின்றனர். அதன்படி, உரிய அடையாள அட்டை இல்லாமல், அரசு அலுவலக வளாகங்களுக்குள் நுழையும் ஊழியர்களை, ஜன., 1ம் தேதி முதல், திருப்பி அனுப்ப உள்ளனர்.


No comments:

Post a Comment

Post Top Ad