அரசு துறைகளுக்கு எதிரான ஊழல் புகார்கள் குறித்து, உள்துறை செயலர் தன் நிலையை விளக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த கோகிலா என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'சென்னை புழல் சிறையில் தண்டனை கைதியாக என் கணவர் உள்ளார். சிறையில் அவர் மேற்கொண்ட பணிக்காக, நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை' என்று கூறியிருந்தார்.
இம்மனு விசாரணைக்கு வந்த போது, தமிழக சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில், 14 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக, மத்திய தணிக்கை துறை கூறியுள்ளது என, பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளதாக மனுதாரரின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ர மணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார்.
அதை பரிசீலித்த நீதிபதிகள், 'மத்திய தணிக்கை குழுவின் அறிக்கை, 2022 செப்டம்பரில் வெளியான நிலையில், கடந்த 13ம் தேதி தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது; இவ்வளவு நாட்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை' என்று கேள்வி எழுப்பினர்.
'தமிழகம் முழுதும் அரசு துறைகளில் நடக்கும் ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் குறித்து, அரசின் நிலைப்பாடு என்ன; இது போன்ற புகார்களை, அரசு தீவிரமாக எடுத்துக் கொள்கிறதா' என்றும் கேள்வி எழுப்பினர்.
'தவறு செய்த அதிகாரிகள், அனைத்து பலன்களையும் பெற்று ஓய்வு பெற அனுமதிக்கக் கூடாது; இது போன்ற அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இதற்கு, அரசு வழக்கறிஞர் முனியப்பராஜ், ''மத்திய தணிக்கை குழுவின் அறிக்கை வெளியானதில் இருந்து, அதுகுறித்து விசாரணை நடத்தி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழல் புகார்களை அரசு தீவிரமாக கருதுகிறது,'' என்றார்.
இதையடுத்து, இந்தப் பிரச்னையில் விரிவான அறிக்கை அளிக்க உள்துறை செயலருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 6க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
No comments:
Post a Comment