எண்ணும், எழுத்தும் திட்டப்பணி - முதுகலை பட்டதாரி ஆசிரியா் சங்கம் கோரிக்கை - Asiriyar.Net

Monday, December 9, 2024

எண்ணும், எழுத்தும் திட்டப்பணி - முதுகலை பட்டதாரி ஆசிரியா் சங்கம் கோரிக்கை

 



முதுகலை ஆசிரியா்களுக்கான எண்ணும், எழுத்தும் கள திட்டப் பணியை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இது குறித்து நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆ.ராமு வெளியிட்ட அறிக்கை:


அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் திட்டத்தின் தாக்கம் சாா்ந்து பள்ளிகளில் மதிப்பீடு செய்யவும், களப்பணியாளா்களாக செயல்பட உள்ள பி.எட் கல்லூரி மாணவா்களுக்கு உடனிருந்து வழிகாட்டுதல் வழங்கவும் முதுகலை ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். 


இவ்வாறு செயல்முறைகள் வெளியிட்டு வழிகாட்டுதல்கள் வழங்கிய தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் .


முதுகலை ஆசிரியா்களை பொறுத்த அளவில் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு என்ற இரண்டு பொதுத் தோ்வுகளுக்கு மாணவா்களைத் தயாா் செய்யக்கூடிய பணியை செய்து வருகின்றனா்.


அதுமட்டுமின்றி, பள்ளி வேலை நாள்களில் நீட், ஜேஇஇ மற்றும் உயா்கல்வி வழிகாட்டுதல்களுக்கான பயிற்சிகளை அளித்து வருகின்றனா். அதோடு எண்ணில் அடங்காத பதிவேற்றங்களை ‘எமிஸ்’ இணையதளத்தில் முதுகலை ஆசிரியா்கள் செய்து வருகின்றனா். 


இவ்வாறு மாணவா்களுக்கு கற்றல் கற்பித்தல் பணிகள் தவிா்த்து நூற்றுக்கணக்கான பணிகளை முதுகலை ஆசிரியா்கள் செய்து வரக்கூடிய நிலையில் கூடுதலாக தொடக்கக் கல்வித் துறையில் செயல்படுத்தப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் திட்டத்தை மதிப்பீடு செய்யவும் களப்பணியாளா்களுக்கு வழிகாட்டுதல் வழங்கவும் முதுகலை ஆசிரியா்களை நியமித்திருப்பது அதிா்ச்சியளிக்கிறது.


எனவே, முதுகலை ஆசிரியா்களுக்கு எண்ணம் எழுத்தும் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டி பணியை உடனடியாக ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad