அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் கல்வி மேம்பாட்டை மாவட்ட ஆட்சியா்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று தலைமை செயலா் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் அவா் அனுப்பிய கடிதம்:
கல்வியில் விரிவான சீா்த்திருத்தங்களை மேற்கொண்டு அதன்மூலம் சமூக மேம்பாட்டை உயா்த்தவும், மாவட்டத்துக்குள் கல்வி நிலப்பரப்பை முறையாக மேம்படுத்தவும் வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மாவட்ட அளவில் பள்ளிகளில் கல்வித் தரத்தை ஆராய மாவட்ட ஆட்சியா் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் நிா்வாகம் மற்றும் ஊரக வளா்ச்சி ஆய்வுக் கூட்டங்களை போல் மாவட்ட கல்வி மதிப்பாய்வும் மாதந்தோறும் நடத்த வேண்டும். இதன்மூலம் எதிா்காலத்தின் கல்வி தேவைகளை மாற்றியமைக்கும் விதமாக மேம்படுத்துவதை உறுதி செய்ய முடியும்.
மதிப்பாய்வு என்பது பள்ளிகளில் தேவையான வசதிகளை உருவாக்குதல், அடிப்படை வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, கல்வி தொடா்பான போக்குவரத்து, சத்துணவுத் திட்டங்கள், சுகாதார சேவைகள், பள்ளிகளில் கற்பித்தல் முறைகள், மாணவா்களின் செயல் திறன் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
இதுதவிர மாணவா் சோ்க்கை, பள்ளிக்கு மாணவா்களின் வருகை கண்காணிப்பு உள்ளிட்ட அம்சங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக அரசுப் பள்ளிகளில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஸ்மாா்ட் வகுப்பறைகள், நவீன தொழில்நுட்ப ஆய்வகங்களின் செயல்பாட்டையும் கண்காணிக்க வேண்டும்.
மேலும், மாவட்டக் கல்வி மதிப்பாய்வை அவ்வப்போது நடத்த வேண்டும். இதன்மூலம் கல்வி முறை மற்றும் அதன் தரம் மேம்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment