பதவி உயர்வு இடமாறுதல் - அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி - Asiriyar.Net

Monday, June 24, 2024

பதவி உயர்வு இடமாறுதல் - அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி

 அரசு பள்ளி ஆசிரி யர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கில், பதவி உயர்வு இடமாறுதல் வழங்கப்படாததால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, இந்த ஆண்டுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போதே அறிவிக்கப்பட்டது. ஜூன், 30க்குள் கவுன்சிலிங்கை முடிக்கவும் திட்டமிடப்பட்டது. ஆனால், பல்வேறு நடைமுறை சிக்கல்களால், இந்த இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படாமல் நிறுத்தப்பட்டது.


இதையடுத்து, கவுன்சிலிங்கிற்கான புதிய அட்டவணை நேற்று முன்தினம் வெளியானது. தொடக்க கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கும், தனித்தனியே கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.


இதில், இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாகவும்; பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாகவும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங்குவதற்கான கவுன்சிலிங் இடம் பெறவில்லை. இதனால், ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


இதுபற்றி பெயர் கூற விரும்பாத ஆசிரியர்கள் கூறியதாவது: 


பதவி உயர்வு விவகாரத்தில், சில சங்கங்களின் தனிப்பட்ட நிலைப்பாடுகளுக்கு ஆதரவாக, பள்ளிக்கல்வி துறை செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. 


தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு, 'டெட்' என்ற ஆசிரியர் தகுதி தேர்வு வேண்டுமா, வேண்டாமா என்பதில், அரசு சரியான முடிவெடுக்கவில்லை. இதனால், வழக்குகளின் விசாரணை தாமதமாகி, பதவி உயர்வு கவுன்சிலிங் நிறுத்தப்பட்டுள்ளது.


முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, தலைமை ஆசிரியர் பதவி உயர்விலும் முன்னுரிமை வழங்கப்பட்டது. இது, விதிகளுக்கு புறம்பானது என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும், அதை பள்ளிக்கல்வி துறை சரியாக கையாளவில்லை. அதனால், தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வும் நிறுத்தப்பட்டுள்ளது.


அரசு பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்க்க வேண்டும்; தரம் உயர்த்த வேண்டும் என்று கூறிவிட்டு, ஆசிரியர்களின் விஷயத்தில், பள்ளிக்கல்வி துறை சரியான விதிகளை வகுக்காமல் அலட்சியம் காட்டுவதால், இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.Post Top Ad