அரசுப் பள்ளிகளில் அக்கறை காட்டுவோம் - Asiriyar.Net

Saturday, June 29, 2024

அரசுப் பள்ளிகளில் அக்கறை காட்டுவோம்

 




நம் நாடு விடுதலையாகி 75 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. நம்மை நாமே ஆளும் உரிமை பெற்றுவிட்டோம். மக்களின் நன்மைக்காகவே மக்களாட்சி நடைமுறையில் உள்ளது. இருந்தும், நம்மிடையே வறுமை,வேலையில்லாத் திண்டாட்டம், வன்முறைகள், போதைப் பொருள் பயன்பாட்டுக்கு அடிமையாகுதல், சட்ட விதிமீறல்கள் போன்றவை அன்றாடம் நடைபெற்று வருகின்றன. இவை யாவற்றுக்கும் காரணம் மக்களிடையே காணப்படும் படிப்பறிவின்மையே ஆகும்.


கல்வி குழந்தைகளின் படைப்புத் திறனையும், பணம் ஈட்டும் திறனையும் அதிகரிக்கச் செய்கிறது. வாழ்க்கையை சரியான முறையில் புரிந்துகொள்ளும் ஆற்றலையும் அவா்களுக்கு வழங்குகிறது.


வரும் கல்வியாண்டில் முதலாம் வகுப்புக்கான சோ்க்கையில் பெரிய இலக்கு நிா்ணயம் செய்து கல்வி அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. இந்நிலையில், அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்திருப்பதாக ஊடகங்கள் மூலம் அறிய வருகிறோம்.


பல அரசுப் பள்ளிகள் தனியாா் பள்ளிகளைவிட சிறப்பாக செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது. அந்த நிலை பிற அரசுப் பள்ளிகளிலும் ஏற்பட வேண்டும். பெற்றோா்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சோ்க்க அதிக அக்கறை காட்ட வேண்டும். பெருமையாகவும் கருத வேண்டும். அப்துல் கலாம் போன்ற பல மேதைகள் அரசுப் பள்ளிகளின் வாா்ப்புகளே.


தனியாா் மழலையா் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் தொடா்ந்து அங்கேயே முதல் வகுப்பில் சோ்ந்து விடுகிறாா்கள். இதனால், அரசு தொடக்கப் பள்ளிகளில் முதல் வகுப்பில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைவது இயல்பானதே. எனவே, முன்தொடக்கக் கல்வியில் மாணவா் சோ்க்கையில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது தற்போதைய காலத்தின் கட்டாயமாகும்.


குடும்பத்தைவிட்டு வெளியே வந்து முதன் முதலாக வெளி உலகைப் பாா்க்கும் குழந்தைகளுக்கு பள்ளியில் ஏற்படும் கற்றல் அனுபவங்கள் இனிமையானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவா்களின் கற்றலில் இடைநிறுத்தல் தவிா்க்கப்படும். தொடக்கக் கல்விதான் மற்ற நிலைக் கல்விக்கு எல்லாம் அடிப்படையாக அமைகிறது. எனவே, தரமான தொடக்கக் கல்விக்கு அரசு முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும்.


கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் குழந்தைகளின் மனதுடன் தொடா்பு கொண்டவை. மிகவும் சிக்கலான இப்பணியில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கு கற்பித்தலில் முழு சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும்.


இப்படித்தான் கற்பிக்க வேண்டும் என்று சொல்வதைத் தவிா்க்க வேண்டும். மாணவா்கள் குறிப்பிட்ட வகுப்பை முடித்த பிறகு பெற்றிருக்க வேண்டிய கற்றல் விளைவுகள் இவையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடலாம். அன்றாட பள்ளிச் செயல்பாடுகளை கல்வித் துறையின் செயலிகளில் பதிவிடுவதிலேயே ஆசிரியா்களின் கணிசமான நேரம் கழிக்கப்படுவது தவிா்க்கப்பட வேண்டும். மேலும், தகுதியும், திறமையும் வாய்ந்த ஆசிரியா்கள் காலிப் பணியிடங்களில் பணியமா்த்தப்பட வேண்டும்.


கற்பித்தல் தவிர இதர பணிகளில் ஆசிரியா்களை ஈடுபடுத்துவதும் தவிா்க்கப்பட வேண்டும். ஆசிரியா்களும் தமக்கு சமுதாயம் அளித்துள்ள பொறுப்பின் மகத்துவத்தை உணா்ந்து எந்தப் புகாருக்கும் இடமளிக்காமல் திறம்பட அா்ப்பணிப்பு உணா்வுடன் தம் பணியை ஆற்ற வேண்டும்.


கிராமப்புறப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்படுத்துதல் வேண்டும். மாணவா்கள் தங்களது எண்ணங்களை அச்சமின்றி வெளிப்படுத்துவதற்கு அளவற்ற வாய்ப்புகளை வழங்க வேண்டும். இது மாணவா்களின் தொடா் கற்றலுக்கு மிகவும் உதவும்.


மாணவா்களுக்கு புத்தக அறிவோடு நீச்சல், மிதிவண்டி ஓட்டுதல், சவால்களை வெற்றியுடன் எதிா்கொள்ளுதல் போன்ற வாழ்வியல் திறன்களையும் அளிப்பது நல்லது. இவ்வாறான வாழ்வியல் திறன்களைப் பெறாத மாணவா்கள்தான் தோல்விகளை வாழ்வின் ஒரு பகுதியாக நினைப்பதில்லை. தற்கொலையில் ஈடுபடுகிறாா்கள்.


தமிழ் வழிக் கல்வியுடன் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வியும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். தனியாா் பள்ளிக் குழந்தைகளுக்கு இணையாக ஆங்கில மொழியை சரளமாகப் பேசும் வகையில் சிறப்புப் பயிற்சிகள், விளையாட்டு, கலைத் திறன்களை வெளிக்கொண்டு வரும் நடவடிக்கைகளில் அரசு மேலும் அக்கறை காட்ட வேண்டும். அரசின் அனைத்துநிலை பள்ளிகளிலும் குழந்தைகள் அனைவரும் சமமான, தரமான கல்வியைப் பெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.


மாநிலத்தில் கல்வித் தரத்தை மேலும் உயா்த்த தொலைநோக்குப் பாா்வையுடன் பள்ளிக் கல்வி இயக்ககம், தொடக்கக் கல்வி இயக்ககம், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம், அரசுத் தோ்வுகள் இயக்ககம், ஆசிரியா் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம், பள்ளிசாரா வயது வந்தோா் கல்வி இயக்ககம், பொது நூலகங்கள் இயக்ககம், பள்ளிளின் பெற்றோா் -ஆசிரியா் கழகம் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.


நம் குழந்தைகள் அனைவருக்கும் நல்ல வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் தரமான கல்வியே தற்போதைய உடனடித் தேவை. தற்போது தொழிற்கல்வி தரமானதாக இருப்பதாகத் தெரியவில்லை. அதனால்தான், தற்கால இளைஞனுக்கு தொழிற்கல்வி படிப்பை முடித்த உடனே ஒரு நல்ல வேலை கிடைப்பதில்லை. வேலைச் சந்தை எப்போதுமே போட்டிமிக்கது. தகுதியும், திறமையும் பெற்றவா்கள் மட்டுமே இதில் வெற்றி பெற முடியும். மேலும், தீய நட்புகளின் மாயவலைக்கு பலியாகி பணம் காணும் நடவடிக்கைகளில் வேலையில்லா படித்தவன் ஈடுபடுகிறான். தொடா்ந்து அவன் சமூகவிரோதச் செயலில் ஈடுபடுகிறான். இவற்றை வளா்ச்சி அடைந்த மனித நாகரிகத்தின் அடையாளங்களாக நாம் கருத முடியாது.


தரமான தொழிற்கல்வியைப் பெறும் மாணவா்கள் வெளிநாட்டில் கிடைக்கும் வேலைவாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறாா்கள். இதனால் திறமையானவா்களை நம் நாடு இழந்து வருவது தொடா்கிறது. இது தவிா்க்கப்பட வேண்டும்.


அரசுப் பள்ளிகள் முழுக்க, முழுக்க மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், அவை சமுதாயத்துக்கு முழுப் பலன்களை அளிக்கும் வகையில் செயல்பட வேண்டும். அதற்கு முழு ஆதரவு அளிக்க வேண்டியது அனைத்து பெற்றோா்களின் கடமையுமாகும்.


மேலும், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் 25 விழுக்காடு மாணவா் சோ்க்கை முன்தொடக்க கல்வியில் ஒதுக்கப்படுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை கணிசமாகப் பாதிக்கிறது. புதிய கல்வியாண்டு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், கல்வித் துறையைச் சாா்ந்த அனைவரும் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரிக்கும் பொறுப்பை ஏற்று அக்கறையுடன் செயல்பட வேண்டிய காலமிது.



No comments:

Post a Comment

Post Top Ad