பள்ளி வேலை நாட்களில் மாற்றம் - பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை - Asiriyar.Net

Thursday, June 20, 2024

பள்ளி வேலை நாட்களில் மாற்றம் - பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை

 




இந்த கல்வியாண்டுக்கான பள்ளிக் காலண்டரில் கல்வித்துறையால் வேலை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் மாணவர்கள் நலன் கருதி இதில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.


இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மெண்ட் கூறியிருப்பதாவது:


இந்த கல்வி ஆண்டு ஜூன் 3ம் தேதிக்கு பதில் 10ம் தேதி துவங்கியுள்ளது. இதில் ஐந்து நாட்கள் மட்டுமே காலதாமதமாக இருந்தும், மாணவர்களுக்கான வேலை நாட்கள், 220 எனவும், ஆசிரியர்களுக்கான வேலை நாள் 225 ஆகவும் உள்ளது.


இது மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கும் மன அழுத்தத்தை கொடுக்கக்கூடியாதாகும். ஆசிரியர்களுக்கு ஓராண்டுக்கு வழங்கப்படும் பயிற்சி நாட்கள் வேலை நாட்களாகவே கருதப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறையின் அரசாணைப்படி கல்வி ஆண்டில் 210 நாட்கள் வேலை நாட்களாக உள்ளன.


மேலும், காலாண்டு விடுமுறை கடந்த ஆண்டுகளில் ஏழு நாட்கள் என்பது தற்போது இரண்டு நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் கூடுதல் வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், ஒரு கல்வியாண்டில் 19 சனிக்கிழமைகள் கூடுதல் வேலை நாட்கள் என்பது ஆசிரியர்களுக்கு கூடுதல் பணி சுமையாக உள்ளது.


மேலும் கல்வியாண்டின் கடைசி வேலை நாள் ஏப்ரல் 17ம் தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதன் பிறகு ஐந்து நாட்கள் ஆசிரியர்கள் நிர்வாகப் பணி என்கிற பெயரில் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது, இது இதுவரை கடைபிடிக்கப்படாத புதிய நடைமுறையாக உள்ளது.


இந்த அட்டவணையில் கடந்த ஆண்டுகளைப் போல 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை குறிப்பிடப்படவில்லை.


மேலும் அட்டவணையில் கல்வி சாரா செயல்பாடுகள், கல்விசார் செயல்பாடுகள் என பிரிக்கப்பட்டுள்ளது. இதை எவ்வகையான ஆசிரியர்கள் கையாளுவது என்பதும் குறிப்பிடப்படவில்லை.


ஆசிரியர்கள், மாணவர்கள் நலன் கருதி இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள ஆண்டு காலண்டரை மறுபரிசீலனை செய்து, கடந்த ஆண்டுகளைப் போல 210 வேலை நாட்கள் என, மாற்றி அறிவிக்க வேண்டும்.


இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad