G.O 146 - அரசு நிதி உதவி பள்ளி உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது - வழிகாட்டு நெறிமுறைகள் (28.06.2024) - Asiriyar.Net

Saturday, June 29, 2024

G.O 146 - அரசு நிதி உதவி பள்ளி உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது - வழிகாட்டு நெறிமுறைகள் (28.06.2024)

 




பள்ளிக் கல்வி - அரசு உதவிபெறும் பள்ளிகள் - 2023-2024ஆம் கல்வி ஆண்டிற்கான பணியாளர் நிர்ணய அறிக்கையின்படி அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் உபரிப் பணியிடங்களில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது .


அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் மாவட்டத்திற்கு உள்ளேயும் அதன் பின்னரும் உபரி ஆசிரியர் இருந்தால் மாவட்டத்திற்கு வெளியேயும் பணி மாறுதல் செய்ய தமிழக அரசு உத்தரவு.


Click Here to Download -  G.O 146  - Aided Schools Teachers District Deployment - New Norms - Pdf


அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உபரிப் பணியிடங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:


* 1.8 நிலவரப்படி பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டு, பள்ளி வாரியாக, பதவி வாரியாக உபரி ஆசிரியர்களின் விவரங்கள் இஎம்ஐஎஸ்-ல் முதன்மைக் கல்வி அலுவலரால் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.


* பணிநிரவலைப் பொறுத்தவரையில், பள்ளி வாரியாக, பதவி வாரியாக பணியில் இளைய உபரி ஆசிரியர்கள் கண்டறியப்பட்டு, நடைமுறை விதிகளைப் பின்பற்றி மாவட்ட அளவில் பதவி வாரியாக மூதுரிமைப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.


* இம் முன்னுரிமை பட்டியலின்படி, உபரி ஆசிரியர்களை கலந்தாய்வு மூலம் மாவட்டத்திற்குள் பிற அரசு நிதி உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் நிரப்பத் தகுந்த காலிப் பணியிடங்களுக்கு பணிநிரவல் செய்ய வேண்டும்.


* மாவட்டத்திற்குள் மேற்கண்டுள்ளவாறு பணி நிரவல் நடவடிக்கை நிறைவடைந்த பின்னர் எஞ்சியுள்ள உபரி ஆசிரியர்களை மாவட்டத்திற்குள் பிற அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு மாற்றுப் பணியில் நியமிக்க வேண்டும்.


* இதன் பின்னரும் உபரி ஆசிரியர்கள் எஞ்சியிருப்பின், அருகாமை மாவட்டங்களில் உள்ள பிற அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு நிரப்பத் தகுந்த காலிப்பணியிடங்களில் முதலில் மாற்றுப் பணியில் பணியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பின்னர், பிற மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளுக்கு மாற்றுப் பணியில் பணியமர்த்தலாம்.


* மேற்கண்டுள்ளவாறு மாற்றுப் பணியில் நியமிக்கப்படும் ஆசிரியர்களின் தொகுப்பு பட்டியல் மாவட்ட அளவில் இஎம்ஐஎஸ்-ல், தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பராமரிக்கப்பட வேண்டும்.


* பணிநிரவல் செய்யப்பட்ட உபரி ஆசிரியர் ஏற்கனவே பணிபுரிந்து வந்த பள்ளியில் அவரது பாடத்திற்குரிய ஆசிரியர் பணியிடம் காலியேற்பட்டு, அப்பணியிடம் நிரப்பத் தகுதியுடையதாக இருப்பின் அடுத்தடுத்த கல்வியாண்டுகளில், 1991-92ம் ஆண்டிற்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட அரசு நிதி உதவி பெறும் பிரிவுகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து, பணியாளர் நிர்ணய அறிக்கையின்படி, அப்பள்ளிக்கு மீளவும், அப்பணியிடம் திரும்ப அனுமதிக்கப்படின், அரசுப் பள்ளிக்கு மாற்றுப் பணியில் நியமிக்கப்பட்ட ஆசிரியரை மீளவும் அவர் பணியாற்றிய பள்ளிக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும்.


* மேலும், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் நிரப்பத் தகுந்த காலிப்பணியிடம் ஏற்படும் போது அப்பணியிடத்தினை நிரப்ப முன் அனுமதி கோரி பள்ளி நிர்வாகம் கருத்துரு சமர்பிக்கும்போது, மேற்கண்டுள்ளவாறு மாற்றுப் பணியில் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை பணியிடங்களுக்கு பணி நிரவல் செய்து நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


* சிறுபான்மையற்ற தனித்த மேலாண்மைப் பள்ளிகளைப் பொறுத்தவரையில், நிரப்பத் தகுந்த காலிப் பணியிடங்களில் மேற்கண்டுள்ளவாறு பணி நிரவல் செய்திட உபரி ஆசிரியர் யாரும் இல்லை மற்றும் மாற்றுப்பணியில் எவரும் பணிபுரியவில்லை என்ற நேர்வில், தொடர்புடைய பள்ளியில் பதவி உயர்வு வழங்குவதற்கு தகுதியானவர்கள் யாரும் பணிபுரியவில்லை என்ற சூழலில் மட்டும் நேரடி நியமனத்திற்கான உரிய முன் அனுமதியை வழங்கலாம்.


* அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் உபரி ஆசிரியர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, கலந்தாய்வில் சார்ந்த ஆசிரியர்களை தெரிவு செய்யும் பள்ளிகளுக்கு பணிநிரவலில் ஆணை முதன்மைக் கல்வி அலுவலரால் வழங்கப்படும் நிலையில், தொடர்புடைய பள்ளி நிர்வாகங்கள் இப் பணிநிரவல் நடவடிக்கைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி உரிய ஆசிரியரை பணிவிடுவிப்பு மற்றும் பணியேற்பு செய்திட அனுமதித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


அவ்வாறின்றி, தொடர்புடைய பள்ளி நிர்வாகங்கள் பணிநிரவல் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுக்கும் நேர்வில், அப்பள்ளிக்கு அனுமதிக்கப்பட்ட தொடர்புடைய அப்பணியிடத்தை திரும்பப் பெறுதல், பள்ளிக் குழுவை தற்காலிகமாக செயலற்றதாக்கி நேரடி மானியத்தின் கீழ் கொண்டு வருதல், பள்ளிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை தற்காலிகமாக திரும்பப் பெறுதல் உள்ளிட்ட சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.


எனினும் பள்ளி நிர்வாகத்தின் மீது மேற்கண்டுள்ளவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் நேர்வில், பள்ளி நிர்வாக தரப்பின் கருத்தினை அறியும் பொருட்டு ஒரு வாய்ப்பு வழங்கி, பள்ளி நிர்வாகம் சமர்ப்பிக்கும் விளக்கத்தினை பரிசீலித்து அதன் அடிப்படையிலேயே இறுதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.


* 1.8 மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். உபரி ஆசிரியர் விவரங்கள் இஎம்ஐஎஸ்-ல் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.


* சிறுபான்மை கூட்டுமேலாண்மைப் பள்ளிகளைப் பொறுத்தவரையில், அம்மேலாண்மையின் கீழ் இயங்கிவரும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளுக்கு தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர்களால் நிர்ணயம் செய்யப்பட்ட பணியாளர் நிர்ணய அறிக்கையின்படியான உபரி ஆசிரியர்களை தங்களது நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள பிற அப்பள்ளிகளுக்குரிய பணியாளர் நிர்ணய பள்ளிகளில் அறிக்கையின்படி மானியம் பெற அனுமதிக்கப்பட்ட நிரப்பத்தகுந்த காலிப் பணியிடங்களில் பள்ளி நிர்வாகத்தின் மூலம் பணி நிரவல் கூட்டு செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட வேண்டும்.


* தனித்த சிறுபான்மை அரசு நிதி உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைப் பொறுத்தவரையில் உபரி ஆசிரியர்களை அதே வகையிலான பிற சிறுபான்மைப் பள்ளிகளில் அக்கல்வியாண்டிற்குரிய பணியின் நிர்ணய அறிக்கையின்படி அனுமதிக்கப்பட்ட நிரப்பத்தகுந்த காலிப் பணியிடங்களில் பள்ளி நிர்வாகத்தின் இசைவின் அடிப்படையில் பணி நிரவல் நடவடிக்கை செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


* சிறுபான்மை கூட்டு மேலாண்மையின் கீழ் நிரப்பத்தகுந்த காலிப்பணியிடங்கள் இல்லாத நேர்விலும், தனித்த சிறுபான்மை மேலாண்மைப் பள்ளிகள் பள்ளி நிர்வாக இசைவின் அடிப்படையில் பணி நிரவல் செய்யப்பட்ட பின்னரும், எஞ்சியுள்ள உபரி ஆசிரியர்களை மாவட்டத்திற்குள் பிற அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட நிரப்பத் தகுந்த காலிப்பணியிடங்களில் மாற்றுப் பணியில் நியமிக்க வேண்டும்.அதன் தொடர்ச்சியாக தேவைப்படும் நேர்வுகளில் மாவட்டத்திற்குள் அரசுப் பள்ளிகளில் மாற்றுப் பணியில் நியமித்திட வேண்டும்.


* மேற்கண்டுள்ளவாறு மாவட்டத்திற்குள் நிதி உதவி பெறும் பள்ளிகளில் நிரப்பத்தகுந்த காலிப்பணியிடங்களில் பணிநிரவல் மற்றும் அரசு / பிற நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாற்றுப்பணியில் நியமித்த பின்னரும் உபரி ஆசிரியர்கள் எஞ்சியிருப்பின் அவர்களை அருகாமை மாவட்டங்களில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட நிரப்பத்தகுந்த காலிப்பணியிடங்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்பட வேண்டும். இதன் தொடர்ச்சியாக தேவையெனில் பிற மாவட்ட அரசுப் பள்ளிகளுக்கு மாற்றுப் பணியில் பணியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.


* சிறுபான்மைப் பள்ளிகளில் நிரப்பத்தகுந்த காலிப்பணியிடம் ஏற்படும்போது, அக்குறிப்பிட்ட பதவிக்கு அப்பள்ளி நிர்வாகத்தால் நியமனம் செய்யப்பட்டு உபரி ஆசிரியரானதால் பிற பள்ளிகளில் மாற்றுப் பணியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் இருப்பின் அவர்களைக் கொண்டே அப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். அவ்வாறு மாற்றுப்பணியில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்கள்/உபரி ஆசிரியர்கள் எவரும் இல்லாத நிலையில் பள்ளி நிர்வாகம் அப்பணியிடங்களை பதவி உயர்வு நேரடி நியமனம் மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad