ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான முன்னுரிமையின்படி பதவி உயர்வு - வரவேற்பும் , எதிர்ப்பும்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, January 1, 2024

ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான முன்னுரிமையின்படி பதவி உயர்வு - வரவேற்பும் , எதிர்ப்பும்!

 

தொடக்கக் கல்வியில் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான முன்னுரிமையின்படி பதவி உயர்வு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. இதற்கு பட்டதாரி ஆசிரியர்கள் வரவேற்பும், இடைநிலை ஆசிரியர்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமை எனும் நடைமுறையின்படி பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. 


மறுபுறம் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வட்டார அளவிலேயே பின்பற்றப்பட்டது. இதனால் மூத்த ஆசிரியர்கள் பலர் பதவி உயர்வு பெறாமல் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை மாற்றி அமைக்கக் கோரி பட்டதாரி ஆசிரியர்கள் சார்பில் தமிழக அரசுக்கு தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.


அதையேற்று தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் மாநில முன்னுரிமை அடிப்படையிலேயே இனி பதவி உயர்வு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. 


இதற்கான அரசாணையும் வெளியானது. இதன்மூலம் இடைநிலை பள்ளி ஆசிரியர்கள் இனி நேரடியாக தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக மட்டுமே பதவி உயர்வு பெற முடியும். பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியாது. இந்த அறிவிப்பு பட்டதாரிகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் கூறும்போது, “தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணை 243-ன்படி இனி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக மட்டுமே பதவி உயர்வு பெற முடியும். இது இடைநிலை ஆசிரியர்களிடம் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.


ஏற்கெனவே 6, 7, 8-ம் வகுப்புக்கு பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுவர் என்ற அறிவிப்பால் இடைநிலை ஆசிரியர் நியமனமும் மிகவும் குறைந்துவிட்டது. 


அதேபோல், ஊதிய முரண்பாடுகளும் உள்ளன. ஒருபுறம் ஊதியத்துக்காக போராடி வரும் நிலையில், மறுபுறம் பதவி உயர்வும் மறுக்கப்பட்டுள்ளது. மாநில அளவிலான முன்னுரிமை குறித்தும் எந்தவொரு தொடக்கக்கல்வி இயக்கத்தின் கருத்தையும் கேட்காமல் தன்னிச்சையாக பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணை ஏற்புடையதல்ல. இதை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்”என்று தெரிவித்தார்.


மறுபுறம் தங்கள் 19 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பட்டதாரி ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் கூறும்போது, “எந்தவொரு ஆசிரியர்களின் பதவி உயர்வையும் தட்டி பறிக்கவில்லை. 


எங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமையைதான் போராடி பெற்றுள்ளோம். தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் நிலையில் இருந்து, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுவது ஏற்புடையதல்ல. ஒருநாள்கூட பட்டதாரி ஆசிரியராக பணிபுரியாதவர் பட்டதாரிகளுக்கு தலைமை ஆசிரியராக வருவது சரியாக இருக்காது. அதை உணர்ந்துதான் விதிமுறைகளை தற்போது அரசு திருத்தியுள்ளது” என்றார்.


Post Top Ad