ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல் பெறுவது எப்படி? - எளிய விளக்கம்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, January 15, 2024

ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல் பெறுவது எப்படி? - எளிய விளக்கம்!

 'பட்டா' ஒரு நிலத்தின் உரிமையை சுட்டிக்காட்டும் ஆவணம். இந்த ஆவணத்தை வருவாய் துறை வழங்குகிறது. தமிழ்நாட்டில் பட்டா வாங்குவது மற்றும் மாற்றத்துக்கு ஆன்லைன் வழியே விண்ணப்பிப்பது எப்படி என்பதை விரிவாகப் பார்ப்போம்.


‘பட்டா’ - வீடு, நில உரிமையாளர்கள் வைத்திருக்கவேண்டிய முக்கிய ஆவணமாகும். ஒரு நிலத்தின் உரிமையை சுட்டிக்காட்டும் ஆவணம் இது. இந்த ஆவணத்தை வருவாய் துறை வழங்குகிறது. இதில் உரிமையாளரின் பெயர், சர்வே எண், நில வகை, நிலம் அமைந்துள்ள பகுதி குறித்த விவரங்கள் இருக்கும். மொத்தத்தில் அசையா சொத்தான நிலத்திற்கு மிகவும் முக்கியமான ஆவணம். 


தமிழ்நாட்டில் பட்டா மாற்றத்தை ஆன்லைன் வழியே பெற விண்ணப்பிப்பது எப்படி என்பதை விரிவாகப் பார்ப்போம்.
நில உரிமையாளர்கள் இதனை எளிய முறையில் இணையவழியில் மேற்கொள்ளலாம். தங்கள் நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டும் என எண்ணும் உரிமையாளர்கள் உட்பிரிவற்ற பட்டா மாற்றம், உட்பிரிவுடன் பட்டா மாற்றம் செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பதாரர் விவரம், நில விவரம், இணைப்பு விவரம் மற்றும் கட்டணம் செலுத்துதல் என மொத்தம் நான்கு நிலைகள் கொண்டது இந்த விண்ணப்ப முறை. 


மற்றும் 

ஆன்லைனில் பட்டா வாங்குவது எப்படி?

பாட்டா-வுக்கு விண்ணப்பதாரர்கள் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற தளத்திற்கு செல்ல வேண்டும். அதில்,


‘பட்டா மாறுதல் விண்ணப்பிக்க’ (Apply Patta transfer) என உள்ள ஐகான்/லிங்கை க்ளிக் செய்ய வேண்டும். அது https://tamilnilam.tn.gov.in/citizen/ தளத்திற்கு செல்லும்.

அதில், பயனர்கள் தங்கள் மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். அந்த எண்ணுக்கு குறுஞ்செய்தியாக ஓடிபி வரும்.


அதை கொடுத்து லாக்-இன் செய்ய வேண்டும். அதில் பயனர் பெயர், பெற்றோர், மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி, பாலினம், முகவரி உள்ளிட்ட விவரங்களைக் கொடுக்க வேண்டும். இது விண்ணப்பதாரரின் விவரமாக எடுத்துக் கொள்ளப்படும். 


தொடர்ந்து மாவட்டம், வட்டம், கிராமம், சார்பதிவாளர் அலுவலகம், ஆவணம் பதிவு செய்யப்பட்ட தேதி (சொத்து பத்திரப்பதிவு செய்யப்பட்ட நாள்), ஆவணப் பதிவு எண், புல எண், உட்பிரிவு எண் போன்றவற்றை நில விவரங்களாக கொடுக்க வேண்டும். 
பின்னர், கிரையப் பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம், தானப்பத்திரம் போன்ற ஏதேனும் ஒரு சொத்து பத்திரம், விண்ணப்பதாரரின் அடையாள சான்று (ஆதார், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம்), குடியிருப்பு சான்று போன்றவற்றை இணைப்பு விவரங்களில் கொடுக்க வேண்டும். டாக்குமெண்ட் வடிவில் இதனை வலைதளத்தில் அப்லோட் செய்ய வேண்டும்.


அதன் பின்னர், கட்டணத்தை இணையவழியில் செலுத்த வேண்டும். யுபிஐ மூலமாகவும் கட்டணம் செலுத்தலாம். உட்பிரிவற்ற பட்டா மாற்றம் என்றால் விண்ணப்பக் கட்டணம் ரூ.60 செலுத்த வேண்டி இருக்கும். உட்பிரிவுடன் பட்டா மாற்றம் என்றால் அதற்கான தொகையாக ரூ.400, விண்ணப்பக் கட்டணம் ரூ.60 சேர்த்து செலுத்த வேண்டி இருக்கும். கட்டணம் செலுத்திய பிறகு விண்ணப்பதாரரின் மொபைல் எண்ணுக்கு, பட்டா மாறுதல் தொடர்பாக விண்ணப்பித்த தேதியை குறிப்பிட்டு அந்த விண்ணப்பத்தின் எண் உடன் சேர்த்து விண்ணப்பம் பெறப்பட்டது என்றும், அதற்கான சேவைக் கட்டணமாக பெற்றுக் கொண்ட தொகை குறித்த விவரம், பட்டா மாறுதல் மனு தொடர்பாக புல விசாரணைக்கு வருவாய்த் துறை அலுவலர்களால் (கிராம நிர்வாக அலுவலர் / நிலஅளவர்) தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வரும்.


அதில், குறிப்பிட்டுள்ளது போல அதற்கான பணிகள் நடைபெறும். அதன் பின்னர், பட்டா விண்ணப்பதாரருக்கு கிடைக்கும். 


மேலும், விண்ணப்பத்தின் நிலையை https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற தளத்திற்கு சென்று விண்ணப்ப எண்ணை கொடுத்து பயனர்கள் அறிந்து கொள்ளலாம். Post Top Ad