மாணவியின் கண் பாதிப்பு - தலைமை ஆசிரியர் கைது - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, January 31, 2024

மாணவியின் கண் பாதிப்பு - தலைமை ஆசிரியர் கைது

 





சேலம் மாவட்டம் தலைவாசலில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமுருகவேள் (வயது 57). இவர், 5-ம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது தலைமை ஆசிரியரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் இருந்த மாணவி மீது தலைமை ஆசிரியர் திருமுருகவேள் கம்பை வீசியதாக தெரிகிறது.


அந்த கம்பு சம்பந்தப்பட்ட மாணவி மீது படாமல் அருகில் இருந்த கங்கையம்மாள் மீது பட்டது. அதாவது, மாணவி கங்கையம்மாளின் இடது கண்ணில் குத்தியதாக கூறப்படுகிறது. உடனே தலைமை ஆசிரியர் மாணவியை தலைவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.


வீட்டுக்கு சென்ற மாணவியின் கண்ணில் ரத்தம் வந்ததை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மாணவியை ஆத்தூர், சேலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவிக்கு கண் பார்வை போய் விட்டதாக கூறியதாக தெரிகிறது.


இதைக்கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மாணவியை மதுரையில் உள்ள தனியார் கண் ஆஸ்பத்திரிக்கு தலைமை ஆசிரியர் அழைத்து சென்றுள்ளார். அங்கு மாணவிக்கு 90 சதவீதம் கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் கூறியதாக கூறப்படுகிறது.


இதில் வேதனை அடைந்த மாணவியின் பெற்றோர், தலைமை ஆசிரியரிடம் முறையிட்டனர். அதற்கு அவர், அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தலைவாசல் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி தலைமை ஆசிரியர் திருமுருகவேள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை ைகது செய்தனர்.


கைதான தலைமை ஆசிரியர் மீது கல்வித்துறை அதிகாரிகளிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.


Post Top Ad