பள்ளி வளாகத்தில் ஒற்றுமை - அனைவரும் கைகோர்க்க வேண்டிய தருணம்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, January 26, 2024

பள்ளி வளாகத்தில் ஒற்றுமை - அனைவரும் கைகோர்க்க வேண்டிய தருணம்!

 



நாட்டின் பெரும்பாலான மக்களின் நம்பிக்கை வெளிச்சமாகத் திகழ்பவை அரசுப் பள்ளிகள், அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள்தான். வணிகச் சந்தையின் தாக்கம் கல்வித் துறையில் ஊடுருவி இருந்தாலும், சந்தை எதிர்பார்க்கும் நுகர்வோராக மக்கள் முழுமையாக மாறிவிடவில்லை. தன்மானம் கொண்ட, கண்ணியம் மிக்கவர்களாகவே வாழ விரும்புகிறார்கள். அதேபோல், வன்முறை இல்லாத வகுப்பறை, பாதுகாப்பான பள்ளி வளாகம் என்பதே அனைவரின் விருப்பம்.


அதேவேளையில், மாணவர்களில் சிலர் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள்; கையில் சாதிக்கயிறு கட்டிப் பள்ளிக்கு வருகிறார்கள்; தங்கள் விருப்பப்படி தலைமுடியை அமைத்துக்கொள்கிறார்கள் எனத் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. மறுபுறம் அலுவலர், தலைமை ஆசிரியர், ஆசிரியர் உள்ளிட்டவர்கள் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, மாணவர்களின் புறத்தோற்றத்தில் வெளிப்படும் ஒழுக்கமின்மையைச் சரிசெய்ய முற்படுகின்றனர்.


போதைப் பழக்கத்துக்கு ஆளான மாணவர்களைக் காவலர்கள் பள்ளிக்கு வந்து விசாரணைக்கு அழைத்துச் செல்ல தலைமையாசிரியர்களே அனுமதி அளிப்பது, கையில் சாதிக் கயிறு கட்டியிருந்தால் அகற்றுவது, தலைமுடியை வெட்டிவிடுவது போன்ற நடவடிக்கைகள் மாணவர்களின் மனதில் தாழ்வு மனப்பான்மையையும் சமூகத்தின் மீது கோபத்தையும் உருவாக்குகின்றன. வன்முறைமிக்க இவ்வாறான நடவடிக்கைகள் தங்களைச் சிறுமைப்படுத்தவே மேற்கொள்ளப்படுவதாக மாணவர்கள் கருதுகின்றனர்.


தவறான முன்னுதாரணங்கள்: அதிகாரம் படைத்தவர்கள், ஒருவரை அடக்கிவைத்து (physical confinement by use of position one holds in service), கட்டாயப்படுத்தி ஒரு செயலைச் செய்ய வைப்பது எந்த வகையான உளவியல் தாக்கத்தைக் குழந்தைப் பருவ மாணவர்கள் மனதில் ஏற்படுத்தும் என்பதை ஆசிரியர்கள் கவனிக்கத் தவறுவது வேதனைக்குரியது. அத்தகைய ஆசிரியர் / தலைமை ஆசிரியர் கொண்டாடப்படுவது அதைவிட அதிகம் கவலை தருகிறது.‌


இதற்குப் பதிலாக, பாடநூல்களில் உடல் ஆரோக்கியம் குறித்த பாடங்களை இடம்பெறச் செய்வது, வகுப்பறைக் கற்றல்-கற்பித்தல் செயல்பாட்டில் இடம்பெறச் செய்வது போன்றவற்றின் மூலம் போதைப் பொருள்களின் ஆபத்தை மாணவர்கள் உணரவைக்க முடியும்.


காவல் துறையின் சிறப்புக் கண்காணிப்பின் மூலம் போதைப் பொருள்கள் பள்ளி வளாகத்தையோ மாணவர்களையோ நெருங்கவிடாமல் தடுக்கலாம். இவை இரண்டையும் திறன்மிக்க வகையில் செய்ய இயலாமல் பாதிக்கப்பட்ட மாணவர்களைத் தண்டித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர மறுக்கிறோம்.‌


சாதி செய்யும் சதி: கந்துவட்டி வியாபாரம் செய்பவர்கள், ஆற்று மணல், தாதுப் பொருள்கள் போன்றவற்றைச் சட்டத்துக்குப் புறம்பாக விற்பவர்கள், போதைப் பொருள் வியாபாரம் செய்பவர்கள் ஆகியோருக்குப் பாதுகாப்பு அரணாகச் சாதி பயன்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் தங்களுக்குத் தேவையான அடியாள்களை உருவாக்கும் களமாகப் பள்ளி வளாகங்களைப் பயன்படுத்துகிறார்கள்.


குழந்தைப் பருவ மாணவர்களைத் தீரமிக்கவர்களாகச் சித்தரித்து, வன்முறையைக் கையாளப் பழக்கப்படுத்த ‘நாயகர்’ (hero) என்கிற பிம்பத்தைக் கட்டமைக்க நடக்கும் சூழ்ச்சியின் ஒரு பகுதியே சிகை அலங்காரம், கையில் கயிறு எனத் தொடங்கி, ஊர் திருவிழாக்களின் பதாகையில் அவர்கள் ஒளிப்படம் என்ற‌ அளவுக்கு விரிகிறது.


மாணவர்கள் தங்களை ஒரு சாதியுடன் அடையாளப்படுத்திக்கொண்டு, மற்ற மாணவர்களை வேறு சாதியினராகக் கருதுமாறும், மோதல்களில் ஈடுபடுமாறும் தூண்டிவிடப்படுகின்றனர். வழக்கு, விசாரணை என்று வந்துவிட்டால், சாதிப் பாதுகாவலர் என்ற போர்வையில் பணத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி - குற்றத்தில் ஈடுபடுத்தப்பட்ட மாணவர் களின் காவலர்களாக மேலே குறிப்பிடப்பட்ட நபர்கள் சித்தரித்துக்கொள்கின்றனர். விவரம் அறியாத வயதில் இருக்கும் மாணவர்கள் இதில் சிக்கிச் சீரழிகின்றனர்.


அறிவியல்பூர்வமாகப் பல்நோக்கில் ஆய்வு மேற்கொண்டால் போதைப் பொருள் நடமாட்டத்துக்கும், சாதிய வன்மத்துடன் நடந்துகொள்வதற்கும் நெருங்கியதொடர்பு உள்ளதை‌ உணரலாம். இந்தச்சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்றால், முதலில் இதன் ஆரம்பப் புள்ளியைக் கண்டறிய வேண்டும். கண்ணுக்குத் தெரியாமல் மனதில் ஆழப்பதிந்திருக்கும் சாதிய வன்மத்தை அகற்றுவதற்கு அறிவியல்பூர்வமான செயல்திட்டம் வேண்டும்.


சாதிப் பாகுபாடு: சமூகத்தில் பாகுபாட்டை உருவாக்கும் சாதி, தற்போது பள்ளி வளாகங்களில் மாணவர்களிடம் பாகுபாட்டை உருவாக்கத் தொடங்கிவிட்டது. ஒரு சாதியில் பிறந்த ஒரு மாணவர், வேறொரு சாதியில் பிறந்த மாணவருடன் நட்பு பாராட்டக் கூடாது, அவரை உடன்பிறப்பாகக் கருதக் கூடாது என்றெல்லாம் விஷ விதை தூவப்படுகிறது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 17இன்படி‌ தண்டனைக்குரிய குற்றமாகும்.


சாதிப் பாகுபாடு என்னும் இழுக்கை அகற்றவேண்டிய பொறுப்பு அரசு, பள்ளிக் கல்வித் துறைக்கு இருக்கிறது. மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் கூடிப் பேசினால் மட்டுமே இச்சிக்கலுக்கான தீர்வைக் கண்டறிய முடியும்.‌ அவ்வாறு மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கூடிப் பேசிச் சிக்கலைத் தீர்ப்பதற்கான பரிந்துரைகளை உருவாக்கி அரசிடம் தர முற்பட்டால், சாதிய வன்மத்துடன் நடந்துகொள்பவர்கள் பதற்றம் அடைகின்றனர்.


மக்களைச் சாதியாக அணிதிரட்டி தங்கள் பிடியில் வைத்திருப்பதன் மூலம் உருவாக்கிக்கொண்ட செல்வாக்கு தகர்ந்துவிடுமோ என்று அஞ்சத் தொடங்குகின்றனர்.‌ சட்டம் தங்களை நெருங்க முடியாத அளவுக்குத் தங்களைச் சுற்றி ஓர் அரணாகச் சாதி என்ற கருத்தியல் உள்ளது என்று நினைத்து சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படுபவர்கள், சாதி என்னும் கருத்து தகர்ந்துவிட்டால் சட்டத்தின் முன் குற்றவாளிகளாக நிற்க வேண்டிய நிலை ஏற்படும் என்று பயப்படுகிறார்கள்.


அரசு செய்ய வேண்டியவை: மாணவர்களின் உயர் கல்வி, உயர் வேலைவாய்ப்பு, கண்ணியமிக்க வாழ்க்கை ஆகியவை குறித்துச் சிறிதும் கவலைப்படாத தீயசக்திகள், சாதி ஒழிப்புக்கான செயல்திட்டத்தை உருவாக்கிட முயலும் ஆசிரியர்கள் மேல் தங்களது கோபத்தைக் காட்ட முற்படுவதை உணர முடிகிறது.


சாதி ஒழிப்புக்கான செயல்திட்டத்தை உருவாக்கிட முயலும் ஆசிரியர்கள் மீது சில ஆசிரியர்களே வன்மம் காட்டுவதையும் காண முடிகிறது. இத்தகைய போக்கைக் கவனத்தில் எடுத்து, அவர்கள் தங்கள் தவறை உணரும் வகையில் போதுமான பணிக் காலப் பயிற்சிகள் வழங்க வேண்டும்.


சாதிய வன்மத்துடன் நடந்துகொள்ளும் ஆசிரியர்கள்,சாதி வெறியர்களுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புகொண்டிருப்பவர்களை அடையாளம் கண்டு, அவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சிகளை ஆசிரியர் சங்கங்கள் மேற்கொள்ள வேண்டும்.


சாதி ஒழிப்புக்கான செயல்திட்டத்தை உருவாக்கி, குழந்தைப் பருவ மாணவர்களுக்குப் பாதுகாப்பான வளாகங்களாகப் பள்ளிகள் என்றென்றைக்கும் நீடிக்கச் செய்ய அனைத்து வகையிலும் முயற்சி மேற்கொள்ளும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பாராட்டப்பட வேண்டும்.


குறைந்தபட்சம், அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை உயர்த்திப் பிடிக்கவும், தேசிய உறுதிமொழிக்கு ஏற்ற வகையில் நடந்துகொள்ளவும் முற்படும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அரசமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள அடிப்படைக் கடமையாகும்.


சகோதரத்துவத்தை மிக எளிய முறையில் மாணவர்களுக்கு விளக்குவது அவசியம். தேசிய உறுதிமொழியில் உள்ள, ‘இந்தியர்கள் அனைவரும் எனது உடன்பிறந்தவர்கள்’ என்ற வாசகத்தின் பொருளையும், உறுதிமொழி எடுத்துக்கொண்ட பிறகுஅதை மீறக் கூடாது என்பதையும் குழந்தைப் பருவத்தில் உள்ள மாணவர்கள் உணர்ந்திட வகுப்பறைக் கற்றல், கற்பித்தல் செயல்பாட்டு முறை அமைய வேண்டும்.


ஒவ்வொருவரும் கண்ணியமிக்க வாழ்க்கை வாழ்வதற்கு இந்திய அரசமைப்புச் சட்டம்உத்தரவாதம் அளிக்கிறது. சகோதரத்துவம் இல்லாவிட்டால் சுதந்திரமும் சமத்துவமும் அர்த்தமற்ற சொற்களே என்பதை நாம் உணர வேண்டும்.‌ சகோதரத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் ஆசிரியர்களையும் மாணவர்களையும் போற்றுவோம்.


- மின்னஞ்சல்: spcsstn@gmail.com


Post Top Ad