அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து முதல்வர் பரிசீலித்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் நேரடி நியமன வட்டாரக் கல்வி அலுவலர்களின் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது: ஆசிரியர் பணியிடங்களை அதிக எண்ணிக்கையில் நிரப்ப வேண்டும் என்பது அரசின் ஆசை.நிதி அமைச்சகத்திடம் காலிப் பணியிட விவரங்களைக் கொடுக்கிறோம். அவர்கள் நிதி சுமைக்கு ஏற்ப பணியிடங்களை நிரப்ப அனுமதிக்கின்றனர்.
காலை உணவுத் திட்டத்தை பொறுத்தவரையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த முதல்வர் திட்டமிட்டு வருகிறார். அதற்கான சாதகமான அறிவிப்பு நிதி நிலை அறிக்கை கூட்டத்தில் வரும் 1 முதல் 12-ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இலவச காலை உணவு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தாலும் வரலாம்.
நாம் நம்முடைய பள்ளியை தன்னிறைவு பெற்ற பள்ளிகளாக வைத்திருக்க வேண்டும். வட்டாரக் கல்வி அலுவலர்கள் என்று பள்ளிக் கல்வித் துறையால் தெரிவிக்கப்பட்டாலும், எங்களை பொறுத்தவரையில் சிறந்த கல்வித் துறை அதிகாரிகளாகத்தான் அவர்களை பார்க்கிறோம். அதனை நிரூபிக்கும் வகையில் செயல்பாடுகள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்வில், தமிழ்நாடு நேரடி நியமன வட்டாரக் கல்வி அலுவலர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தமிழ்மணி, தலைவர் கஜேந்திரன், தமிழ்நாடு அரசின் ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ் குமார், பெற்றோர் ஆசிரியர் சங்க துணைத்தலைவர் முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment