அரசு பள்ளிக்கு நிலம் தந்த ஆயி அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கல்வியையும் கற்பித்தலையும் உயர்ந்த அறமாக மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக ஆயி அம்மாள் விளங்குகிறார் என முதல்வர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:
கல்விதான் உண்மையான, அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காகக் கொடையாக அளித்துள்ளார் மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம் அவர்கள்.
ஆயி அம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள். கல்வியையும் கற்பித்தலையும் உயர்ந்த அறமாகப் மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் வருகிற குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment