ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடு - Asiriyar.Net

Wednesday, January 17, 2024

ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடு

 

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு விடைத்தாள்களை, மதிப்பிடும் முகாம்கள், குறிப்பிட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அமைக்கப்படும்.


அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடுவர்.


பத்தாம் வகுப்புக்கு, பட்டதாரி ஆசிரியர்கள்; பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், விடைத்தாள்களை திருத்தம் செய்வர்.


கவன சிதறல்


இந்தப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் சிலர், விடை திருத்தும் முகாம்களில், சங்கங்களுக்கான சந்தா வசூலிப்பது, சங்க ஆலோசனை கூட்டம் நடத்துவது போன்றவற்றிலும் ஈடுபடுவர்.


மேலும் சிலர், பணி நேரத்தின்போது டீ குடிக்க வெளியே செல்வது, விடை திருத்தும் முகாம்களை விட்டு வெளியே சென்று, காலம் தாழ்த்தி திரும்புவதும் உண்டு.


இதனை கண்காணிக்கும் பணியில் உள்ள, மாவட்ட கல்வி அதிகாரிகளும், தங்களுக்கு இணையான பதவியில் உள்ளதால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.


குறிப்பிட்ட சில ஆசிரியர்களின் இந்த நடவடிக்கையால், விடைத்தாள் மதிப்பீட்டில், கவன சிதறல் ஏற்பட்டு, சில விடைத்தாள்களுக்கு அதிகமாகவும், சிலவற்றுக்கு குறைவாகவும் மதிப்பெண்களை பதிவிடுவதும், மொத்த மதிப்பெண்களை கூட்டி பதிவு செய்வதில், தவறாக பதிவிடுவதும் போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.


தேர்வு முடிவு வெளியான பிறகு, இந்த விடைத்தாள்களின் மாணவர்கள் சந்தேகப்பட்டு, மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்தால் மட்டுமே, அவர்களுக்கு சேர வேண்டிய மதிப்பெண் கிடைக்கிறது. அதற்கு முயற்சிக்காத மாணவர்களுக்கு, முறையாக சேர வேண்டிய மதிப்பெண் கூட கிடைக்காமல் போகிறது.


இந்நிலையை மாற்ற, நடப்பு கல்வி ஆண்டில், விடை திருத்தும் ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வர, அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.


கடும் தண்டனை


மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பதில், அவர்களுக்கு உயரதிகாரிகளாக உள்ள, முதன்மை கல்வி அதிகாரிகளை முகாம் பொறுப்பாளர் களாகவும், கண்காணிப்பாளர்களாகவும் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


விடைத்தாள் திருத்த பணியின்போது, வெளியே செல்லும் மற்றும் சங்க நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும்;


அவர்கள் திருத்திய விடைத்தாள்களை, தேர்வு முடிவுக்கு முன்பே மறு ஆய்வு செய்து, தவறு கண்டுபிடிக்கப்பட்டால், உரிய மதிப்பெண் வழங்குவதுடன், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு, கடும் தண்டனை வழங்கவும், தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




Post Top Ad