மாநில முன்னுரிமை அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தல் - Asiriyar.Net

Monday, January 1, 2024

மாநில முன்னுரிமை அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தல்

 

தமிழகத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமை என்ற அரசாணை 243ஐ திரும்ப பெற வேண்டும் என சிவகங்கையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர் என்.ரங்கராஜன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:


தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர், தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமையின்படி பதவி உயர்வு வழங்குவது என்ற அரசாணை 243யை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.2022 நவம்பரில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை அளித்த ஆலோசனையை கொண்டு மாநில முன்னுரிமை பட்டியலுக்கு கருத்துரு தயாரிக்க குழு அமைத்தனர். 


அக்கால கட்டத்தில் இது தேவையற்ற செயல். இது ஆசிரியர்களை பாதிக்க செய்யும்.கிராமங்களில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதில் கற்பித்தலை புரிந்து கொள்ளும் விதம் அந்தந்த பகுதி பேச்சு மொழியை கொண்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு பதவி உயர்வு, பணி மாறுதல் ஒன்றிய அளவில் கருதி வந்தனர்.


எனவே தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான சீனியாரிட்டி பட்டியலை தயார் செய்ய வேண்டாம் என்ற ஆட்சேபணையை 2023 அக்., 11ல் கல்வி அமைச்சர், செயலர், இயக்குனர்களுக்கு வழங்கப்பட்டது.


அப்போது நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றி ஆசிரியர்கள் கருத்தை கேட்டு பெற்று, யாரும் பாதிக்காத வகையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் எந்த கருத்து கேட்பும் நடத்தாமல் அரசாணை 243ஐ வெளியிட்டுள்ளனர்.


ஏற்கனவே ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத சூழலில் கூடுதலாக ஈட்டிய விடுப்பு நிறுத்தி வைப்பு, எமிஸ் வலைதளத்தில் புள்ளிவிபரங்கள் பதிவேற்றுவதால் கற்பித்தல் பணிக்கு பாதிப்பு என அடுக்கடுக்காக இடையூறுகளை சந்தித்து வரும் ஆசிரியர்களுக்கு, பேரிடியாக அரசாணை 243ஐ அரசு வெளியிட்டுள்ளது.அரசு எங்கள் கருத்தை புறந்தள்ளினால் போராட்டம் நடத்தும் சூழல் ஏற்படும் என்றார்.


Post Top Ad