போராட்டம் தொடர ஆசிரியர்கள் முடிவு - Asiriyar.Net

Monday, October 2, 2023

போராட்டம் தொடர ஆசிரியர்கள் முடிவு

 




ஊதிய முரண்பாடுகளைகளைவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில், ஏழு நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதில், 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளுடன், பள்ளிக்கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, தலைமை செயலகத்தில் நேற்று பேச்சு நடத்தினார்.இதில், மூன்று சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது, உங்களின் கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவித்து தீர்வு காண்கிறேன் என பள்ளிக் கல்வித்துறை செயலர் தெரிவித்தார்.


ஆனால், இதை ஏற்காத ஆசிரியர் சங்கங்கள், கோரிக்கைகளை நிறைவேற்றும் அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும் என, வலியுறுத்தின. இந்த கோரிக்கை ஏற்கப்படாததால், பேச்சு தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, உண்ணாவிரத போராட்டத்தை தொடரப்போவதாக ஆசிரியர்கள் அறிவித்து உள்ளனர்.


இடைநிலை ஆசிரியர் சங்க மாநில செயலர் ராபர்ட் கூறியதாவது:கடந்த 2009ம் ஆண்டு ஜூன் 1க்குப் பின் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி, 14 ஆண்டுகளாக போராடி வருகிறோம். தி.மு.க., வெற்றி பெற்றால், கோரிக்கைகள்மூன்று மாதங்களில் பரிசீலிக்கப்படும் என, தேர்தல் வாக்குறுதி அளித்தனர். 


ஆனால், இன்னும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. எங்களின் கோரிக்கைகளை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், இன்னும் கால அவகாசம் கேட்கின்றனர். எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.


Post Top Ad