5 நாட்களில் SG/MG மானிய தொகையை செலவிட உத்தரவு - தலைமையாசிரியர்கள் திணறல் - Asiriyar.Net

Monday, October 2, 2023

5 நாட்களில் SG/MG மானிய தொகையை செலவிட உத்தரவு - தலைமையாசிரியர்கள் திணறல்

 மதுரையில் அரசு பள்ளிகளுக்கு வழங்கிய ரூ.லட்சக்கணக்கான மானிய தொகையை ஐந்தே நாட்களுக்குள் செலவிட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற கல்வித்துறையின் நெருக்கடி உத்தரவால் செய்வதறியாது தலைமையாசிரியர்கள் தலைசுற்றிப் போயுள்ளனர்.


நடப்பு கல்வியாண்டிற்கான அரசு, மாநகராட்சி, கள்ளர், ஆதிதிராவிடர் நலத்துறைக்கு உட்பட்ட தொடக்க, நடு, உயர், மேல்நிலை பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் சார்பில் பள்ளி மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இதன்படி மாவட்டத்தில் 100 மாணவர்களுக்குள் உள்ள பள்ளிக்கு ரூ.25 ஆயிரம், 100 மாணவர்களுக்கு மேல் ரூ. 50 ஆயிரம், 400 மாணவர்களுக்கு மேல் ரூ.75 ஆயிரம், 700 மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் என 500க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு செப்.,25ல் வரவு வைக்கப்பட்டது.


இந்த நிதியை செப்.,30க்குள் செலவிட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். செலவிடாத பள்ளியின் நிதி திரும்ப பெற்றுக்கொள்ளப்படும் என கல்வித்துறை கறார் காட்டியுள்ளது. செப்., 27 முதல் காலாண்டு தேர்வு விடுமுறை துவங்கியதால் பெரும்பாலான பள்ளிகளில் மானியத்தை செப்.,30க்குள் செலவிட முடியவில்லை. 


இதனால் வரவு வைத்த நிதியை கல்வித்துறை திரும்ப எடுத்துக்கொள்ளுமா என்ற திக் திக் மனநிலையில் தலைமையாசிரியர்கள் உள்ளனர்.


அவர்கள் கூறியதாவது: இக்கல்வியாண்டிற்கான பள்ளி மானியம் 50 சதவீதம் முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. 5 நாட்களுக்குள் செலவிட கூறியுள்ளனர். காலாண்டு விடுமுறை முடிந்து அக்., 3ல் தான் பள்ளி திறக்கப்படும். வழக்கமாக பள்ளிக்கு ஒதுக்கும் நிதி வகைகளை முதலில் பள்ளி மேலாண்மை குழுவிற்கு (எஸ்.எம்.சி.,) தலைமையாசிரியர் தெரியபடுத்த வேண்டும். 


பின் எஸ்.எம்.சி., கூட்டம் நடத்தி செலவினங்கள் குறித்து அனைத்து உறுப்பினர்களிடம் ஒப்புதல் அளித்து கையெழுத்து பெற வேண்டும் உள்ளிட்ட பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.


ஆனால் தலைமையாசிரியர்களுக்கு 5 நாட்களுக்குள் லட்சக்கணக்கான பணத்தை செலவிட வேண்டும் என்ற உத்தரவு வினோதமாக உள்ளது. நேற்று (அக்.,1) வரை பெரும்பாலான பள்ளிகளில் இந்நிதி செலவிடப்படவில்லை.


ஒரு மாதம் அவகாசம் கொடுத்தால்தான் பள்ளிக்கு உண்மையிலேயே என்ன தேவை என்பதை முடிவு செய்து பயன்படும் வகையில் செலவிட திட்டமிடமுடியும். கல்வித்துறை அதிகாரிகள் இதுகுறித்து யோசிக்க வேண்டும், என்றனர்.


Post Top Ad