அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் ஓய்வூதிய பலன்- சென்னை உயர் நீதிமன்றம்! - Asiriyar.Net

Monday, October 9, 2023

அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் ஓய்வூதிய பலன்- சென்னை உயர் நீதிமன்றம்!

 அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.


சென்னையில் மாம்பலம் – கிண்டி தாசில்தார் அலுவலகத்தில் தலையாரியாக பணியாற்றியவர் டி.வி.எஸ் பெருமாள். இவர் கடந்த 1987 -ம் ஆண்டு பணியில் இருக்கும்போது மரணம் அடைந்தார்.


இதனால், அவரது மனைவி ஜெயா, குடும்ப ஓய்வூதியம் கேட்டு சப் – கலெக்டரிடம் மனு அளித்தார். ஆனால், அந்த மனு மீது எந்த நடவடிக்கும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக 2004 -ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயா வழக்கு தொடர்ந்தார்.


இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 2017 -ம் ஆண்டு ஜெயா பெருமாளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.


இதை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனு நிலுவையில் இருக்கும் போதே ஜெயா இறந்துவிட்டார். இதனால் இந்த வழக்கில் அவரது மகன் பாபு சேர்க்கப்பட்டார்.


இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தலையாரியாக பணியாற்றிய பெருமாள் இறந்த பின்பு, அவரது மனைவிக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி கிடைக்கவில்லை. அதற்குள் அவரும் இறந்து விட்டார்.


எனவே, அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் அதிகபட்சமாக ஆறு மாதங்களுக்குள் கிடைக்க வேண்டும். அதுக்கு தமிழக அரசு உரிய சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.


Post Top Ad