போராடிய இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் கைது - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, October 6, 2023

போராடிய இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் கைது

 ஊதிய முரண்பாட்டை சரிசெய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்து, பல்வேறு பகுதிகளில் உள்ள சமூகநல கூடங்களில் அடைத்தனர். அங்கும் போராட்டத்தை தொடர்ந்ததால் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். விடுவித்தாலும் போராட்டம் தொடரும் என்று அவர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.


சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 10 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இவர்களுடன் கல்வித் துறை சார்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், உடன்பாடு ஏற்படவில்லை. காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட சூழலிலும், ஆசிரியர்கள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தை தொடர்ந்தனர்.


ஆசிரியர் சங்கங்களின் சில கோரிக்கைகளை ஏற்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, ‘இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற 3 பேர்குழு அமைக்கப்படும், பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் ரூ.2,500 உயர்த்தப்படும்’ என்பது உட்பட 5 அறிவிப்புகளை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ்கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.


அரசின் நிதிநிலை கருதி, போராட்டத்தை முடித்துக் கொண்டுஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்கமறுத்து போராட்டத்தை தொடர்வதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்தன.


இதையடுத்து, அன்று இரவேஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டு, டிபிஐ வளாகம்முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.


இந்த நிலையில், டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கலைந்து செல்லாவிட்டால் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸார் நேற்று அதிகாலை5 மணி அளவில் எச்சரித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வலியுறுத்தியும் கலைந்து செல்லாததால், ஆசிரியர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்து, வாகனத்தில் ஏற்றினர்.


அவர்களை ஷெனாய் நகர், ஆயிரம்விளக்கு, புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர் என வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று, சமூகநல கூடங்களில் அடைத்தனர். அப்போது மயக்கமடைந்த சில ஆசிரியர்கள்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். குழந்தைகளுடன் இருப்பவர்கள் மட்டும் ஊர் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.


சமூகநல கூடங்களில் இருந்தவாறே தங்களது போராட்டத்தை தொடர்வதாக ஆசிரியர்கள் அறிவித்தனர். இதையடுத்து, அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டனர். இங்கிருந்து விடுவிக்கப்பட்டாலும், மீண்டும் ஒன்றுதிரண்டு தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் அவர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.


இதுபற்றி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் கூறும்போது, ‘‘சம வேலைக்கு சமஊதியம் என்ற எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இதில் வெற்றி பெறாமல் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்’’ என்றார்.


இதற்கிடையே, காவல் துறையின் கைது நடவடிக்கைக்கு பல்வேறு அரசு ஊழியர், ஆசிரியர்சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
3 சங்கங்கள் தற்காலிக வாபஸ்: சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களில், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் சங்கத்தினர் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக நேற்று தெரிவித்தனர்.


முன்னதாக, சென்னையில் சமூகநல கூடங்களில் அடைக்கப்பட்டிருந்த ஆசிரியர்களை நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், பெங்களூரு புகழேந்தி உள்ளிட்ட ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகளும் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.


Post Top Ad