ஆசிரியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கல்வித்துறை தீவிரம் காட்டி வரும் நிலையில், பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.2000 சம்பள உயர்வு அளிக்க முடிவு என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள பேராசிரியர் கல்வி வளாகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கூட்டமைப்பு, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகியவற்றை சேர்ந்த ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்கள் இரவு பகலாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
அவர்களின் கோரிக்கை குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று முன்தினம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
முடிவில் தமிழ்நாடு முதல்வரிடம் உங்கள் கோரிக்கை குறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கூறி கல்வித்துறை அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். எனினும், முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக எங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுத்து அறிவிக்க வேண்டும் என்று கூறி பிடிவாதமாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.
இந்த நிலையில், போராட்டத்தின் ஒரு கோரிக்கையான பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2000 ரூபாய் சம்பள உயர்வு அளிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அவர்கள் மாதம் ரூ.10,000 ஊதியம் பெற்று வரக்கூடிய நிலையில், ரூ.2000 உயர்த்தி ரூ.12,000 ஆக வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு கோரிக்கையான 2013ல் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்ற அரசாணையும் ரத்து செய்யப்பட உள்ளது.
அதிமுக ஆட்சியில் 2018ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 149ஐ ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த 2 கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment