கெடு விதித்த காவல்துறை - விடிய விடிய தொடருது ஆசிரியர்கள் போராட்டம்! - Asiriyar.Net

Wednesday, October 4, 2023

கெடு விதித்த காவல்துறை - விடிய விடிய தொடருது ஆசிரியர்கள் போராட்டம்!

 சென்னை, டிபிஐ வளாகத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு இன்று இரவு 8 மணி வரை கெடு அளிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை முடித்துக்கொள்வது தொடர்பாகத் திருவல்லிக்கேணி காவல் ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.


நுங்கம்பாக்கம், டிபிஐ எனப்படும் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் 3 விதமான ஆசிரியர் சங்கங்கள், 3 வெவ்வேறு விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த வாரத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. 


டெட் ஆசிரியர்கள் சங்கம் போராட்டம்

’2013ஆம் ஆண்டு டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு, போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறுவதை ரத்து செய்ய வேண்டும். 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அரசாணை எண் 149ஐ ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு உடனடியாகப் பணி நியமனம் அளிக்க வேண்டும்’ என்று கோரி, டெட் ஆசிரியர்கள் சங்கம் போராடி வருகிறது. 


இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் போராட்டம்

இதற்கிடையே சுமார் 20 ஆயிரம் பேரைக் கொண்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெண் ஆசிரியர்கள் தங்களின் குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். இவ்வாறு மொத்தமாக 175-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் பாதிக்கப்பட்டுள்ளனர். 


பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்

முதல்வர் ஸ்டாலின் திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கமும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கமும் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 


பேச்சுவார்த்தை தோல்வி

முன்னதாக தொடக்கக் கல்வித்துறை இயக்குநர், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் நிதித்துறை கூடுதல் செயலாளர் உள்ளிட்டோர் நடத்திய இரண்டு கட்டங்களாக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தின் 5ஆவது நாளான நேற்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டெட்  ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.  


இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு இன்று இரவு 8 மணி வரை கெடு அளிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை முடித்துக்கொள்வது தொடர்பாகத் திருவல்லிக்கேணி காவல் ஆணையர் சேகர் தேஷ்முக் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தொடர் போராட்டத்தால் சட்ட- ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும்


இதற்கிடையே டெட் ஆசிரியர்கள் சங்கம் இன்று மீண்டும் அமைச்சர் அன்பில் மகேஸைச் சந்தித்துப் பேசியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அப்போது முதல்வருடன் இரவுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி இதுதொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்ததாக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே போராட்டத்தைக் கைவிட்டுச் செல்லுமாறு காவல்துறை அறிவுறுத்தி வருகிறது. எனினும் அமைச்சரின் அறிவிப்பு வரும்வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.Post Top Ad