திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியை பார்ப்பவர்கள் அதை அரசுப் பள்ளி என்றே கூறமாட்டார்கள். காரணம் தனியார் பள்ளிக்கு நிகராக பள்ளிக் கட்டிடங்கள் ஜொலிக்கின்றன.
சுத்தமான கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், விசாலமான விளையாட்டு திடல், ‘ஸ்மார்ட்' வகுப்பறை, கூட்டரங்கம், பசுமை நிறைந்த மரங்கள், மாணவர்கள் உணவு சாப்பிட தனி இடம் என தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் அளவுக்கு புதுப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அனைத்து வசதி களுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.
அரசு நிதி ஒதுக்கீட்டின்படி இந்த பள்ளியில் இவ்வளவு வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதா? என பார்த்தால் அதுதான் இல்லை. தலைமை ஆசிரியரின் முயற்சியால் அனைத்து ஆசிரியர்களின் ஒத்துழைப்பால் தன்னார்வலர்கள் செய்து கொடுத்த வசதிகள் தான் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை இந்த பள்ளி இரட்டிப்பாக்கியுள்ளது.
அரசுப் பள்ளி என்றாலே அங்கு கல்வித் தரம் இருக்காது, மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இருக்காது, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் இருக்காது என்ற நிலையை புதுப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அடியோடு மாற்றியிருக்கிறது. பள்ளியின் சுற்றுச்சுவர் முழுவதும் தலைவர்களின் புகைப்படங் களும், அவர்கள் கூறிய கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன. இப்பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் 95 சதவீதம் பேர் உயர் கல்வி படித்து மற்ற மாணவர்களுக்கு முன் உதாரணமாக மாறியுள்ளனர்.
இது குறித்து தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி இந்து தமிழ் திசை செய்தியாளரிடம் கூறியதாவது, ‘‘கடந்த 1960-ம் ஆண்டு இந்த பள்ளி தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் தற்போது 620 பேர் படித்து வருகின்றனர். பொதுதேர்வின் தேர்ச்சி விகிதம் 92 சதவீதமாக உள்ளது. வரும் கல்வியாண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற இலக்கு நிர்ணயித்து உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
இப்பள்ளியில் ஆசிரியராக பணி யாற்றி தலைமை ஆசிரியராக தற்போது பணியாற்றி வருகிறேன். இப்பள்ளியில் மாணவர்களுக்கு சகல வசதிகள் இருந்தால் தான் மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த முடியும் என்பதால் மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஆசிரியர்கள் நாங்களே ஒன்றிணைந்து செய்து கொடுத் தோம். ஏறத்தாழ 7 லட்சம் ரூபாய் வரை செலவழித்து பள்ளியை சீரமைத்துள்ளோம். மேலும், சில வசதிகளை செய்துகொடுக்க தன்னார்வலர்களுடன் பேசி வருகிறோம்.
தங்கப் பதக்கம்
அரசுப் பள்ளியில் படித்தால் பெரிய படிப்புகளுக்கு செல்ல முடியாது என்ற நிலையை கடந்த சில ஆண்டுகளில் நாங்கள் மாற்றியுள்ளோம். எங்கள் பள்ளியில் மேல்நிலை கல்வி முடித்த மாணவர்கள் அதிகம் பேர் உயர் கல்வியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனைப் படைத்துள்ளனர். கல்வி மட்டும் இல்லாமல் விளையாட்டிலும் பல வெற்றிகளை குவித்துள்ளனர்.
அனைத்து வகுப்புகளுக்கும் மின் விசிறி, மின் விளக்கு, தண்ணீர் வசதியுடன் கூடிய சுத்தமான கழிப்பறை, மாணவர்கள் விளை யாட தேவையான விளையாட்டு உபகரணங்கள், மாணவர்களுக்கு யோகா பயிற்சி, கணினி அறிவு, ஆங்கில மொழியில் சரளமாக பேச, எழுத, படிக்க தனிப் பயிற்சி, மாணவர்களின் தனித்திறன் அறிந்து அதற்கான சிறப்பு பயிற்சிகள் என ஒவ்வொன்றாக பார்த்து, பார்த்து மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம்.
எல்லாவற்றிக்கும் அரசாங்கத்தை மட்டுமே நம்பி இருக்காமல் நமக்கு வேண்டியதை நாமே செய்து கொண்டால் தான் நம்முடைய லட்சியத்தை நம்மால் எளிதாக எட்ட முடியும் என்பதை நான் மட்டும் அல்ல எங்கள் பள்ளியின் ஆசிரியர்கள் அனைவரும் பின் பற்றி வருகிறோம்’’ என்றார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் புதுப்பேட்டை அரசு ஆண்கள் பள்ளி மட்டும் அல்லாமல், செவ்வாத்தூர் அரசு உயர் நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அரசு என்பவர் பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தன் சொந்த செலவிலேயே செய்து முடித்துள்ளார். கிட்டத்தட்ட 1.70 லட்சம் ரூபாய் வரை செலவழித்து மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ள தலைமை ஆசிரியர் அரசு பள்ளியின் சுற்றுச்சுவரை புதுப்பிக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.
அரசுப் பள்ளி தானே, வேலைக்கு வந்தோமா? மாதச் சம்பளம் வாங் கினோமா? என்று நினைக்காமல் இது போன்ற தலைமை ஆசிரியர்கள் முயற்சியால் அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிக்கு நிகராக மாறி வருவது ஆரோக்கி யமான நடைமுறை என்பதால் அனைவரும் இதை பின்பற்றினால் மாணவர்களின் கல்வித் தகுதி உயரும்.
No comments:
Post a Comment