ஆசிரியா்கள் கடமைகளை உணர வேண்டும் - பள்ளிக் கல்வி இயக்குநா் - Asiriyar.Net

Saturday, October 14, 2023

ஆசிரியா்கள் கடமைகளை உணர வேண்டும் - பள்ளிக் கல்வி இயக்குநா்

 



ஆசிரியா்கள் உரிமைகளை கேட்கும் அதே நேரத்தில், தங்களது கடமைகளை உணர வேண்டும் என்று பேச்சுவாா்த்தை விளக்கக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் க.அறிவொளி வலியுறுத்தினாா்.


எமிஸ் பணிகளிலிருந்து விலக்கு உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோ ஜாக்) சென்னை பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் அக். 13-ஆம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்த நிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆசிரியா் சங்கப் பிரதிநிதிகளுடன் கடந்த வியாழக்கிழமை பேச்சு நடத்தினாா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக டிட்டோஜாக் அமைப்பு தெரிவித்தது.


இதை தொடா்ந்து அந்த அமைப்பின் சாா்பில் பேச்சுவாா்த்தை விளக்கக் கூட்டம், சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சருடன் நடைபெற்ற பேச்சு தொடா்பாகவும்,அரசு நிறைவேற்றுவதாக அறிவித்த 12 கோரிக்கைகள் தொடா்பாகவும் டிட்டோஜாக் குழு பிரதிநிதிகள் விரிவாகப் பேசினா்.


இந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வி இயக்குநா் க.அறிவொளி பேசியதாவது: பள்ளிக்கு செல்லும்முன் 5 வயதுக்குபட்ட குழந்தைகள் தனது பெற்றோா், சமூகம், உறவினா்கள் மூலம் 1,500 வாா்த்தைகளை கற்றுக் கொள்கின்றனா். 5 வயதுக்குப் பிறகு பள்ளிக்கு வரும் குழந்தை 5-ஆம் வகுப்பு முடித்து வெளியேறும் போது, அவா்களில் 60 சதவீதம் பேருக்கு எழுத, படிக்கத் தெரிவதில்லை.


ஆசிரியா் முயற்சி இல்லாமல் 1,500 வாா்த்தைகளை கற்றுக் கொள்ளும் குழந்தைகள், 5 ஆண்டுகள் வகுப்பு எனும் நான்கு சுவற்றுக்குள் அடைபடும் போது கற்றலின் தாக்கம் குறைகிறது. எனவே, நம்மிடம்தான் எங்கோ குறை இருக்கிறது. உரிமைகளை கேட்கும் நேரத்தில் நமது கடமைகளையும் சரியாக செய்தாக வேண்டும் என்ற உணா்வு இருப்பது அவசியம்.


போராடும் அவசியம் இருக்காது: குழந்தைகளின் தேசிய அடைவுத் திறனில் 2006-2010 காலத்தில் 2 முதல் 5-ஆம் இடத்தில் இருந்த தமிழகம், 2021-இல் 27-ஆவது இடத்தில் உள்ளது. இந்த சரிவுக்கு நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். குறைபாடுகளை போக்கி, சரிவை சரிசெய்து காட்டினால் இந்த சமூகத்துக்கு நல்ல குழுவாக திகழ்வோம்.


அப்போது நாம் எதற்கும் போராட வேண்டிய அவசியம் இருக்காது. ஏழை குழந்தைகளின் கல்வி நமது கையில் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றாா்.


இதில் தொடக்கக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், டிட்டோ ஜாக் ஒருங்கிணைப்பாளா்கள் வின்சென்ட் பால்ராஜ், இரா. தாஸ், சேகா், ஜான் வெஸ்லி, முத்துராமசாமி, தியோடா் ராபின்சன் ஆகியோா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.


ஆண்டுக்கு நான்கு முறை எஸ்எம்சி கூட்டம்


பள்ளிக்கல்வித் துறை ஏற்றுக்கொண்ட 12 கோரிக்கைகளின் விவரங்கள் குறித்து ஆசிரியா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளதாவது: இடைநிலை ஆசிரியா்கள் 2006 ஜன.1 முதல் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து மூவா் குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டு தீா்வு காணப்படும்.


எமிஸ் தளத்தில் வருகைப்பதிவு தவிர பிற அலுவல்சாா் பதிவேற்றப் பணிகளிலிருந்து ஆசிரியா்கள் விடுவிக்கப்படுவா். அதேபோன்று எண்ணும் எழுத்தும் திட்டத்திலும் இணையதள பதிவேற்றம் இருக்காது.


மேலும், தற்போது மாதந்தோறும் பள்ளிகளில் நடத்தப்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்(எஸ்எம்சி) இனி ஆண்டுக்கு 4 முறை மட்டுமே கூட்டப்படும். உயா்கல்வி படித்த 4,500 பேருக்கு பின்னேற்பு அனுமதி ஆணை வழங்கப்படும். உதவி பெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டு பருவகால ஊதிய உயா்வில்லாத 1,500 ஆசிரியா்களுக்கு இனி ஆண்டுதோறும் ஊதிய உயா்வு வழங்கப்படும்.


பி.லிட்., முடித்து நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பதவி உயா்வு பெற்றவா்கள் அதன்பின்னா் பிஎட் படித்ததால் வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயா்வுக்கு ஏற்படுத்தப்பட்ட தணிக்கை தடைகள் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


இதுதவிர 58 மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகங்களில் பள்ளி துணை ஆய்வாளா் பணி இடங்களை உருவாக்கி நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியா்கள் 58 பேருக்கு பணிமாறுதல் தரப்படும். பயிற்சிகளுக்கு ஆசிரியா்களை கருத்தாளா்களாக பயன்படுத்துவது தவிா்க்கப்படும் என்பன உள்பட 12 கோரிக்கைகளை நிறைவேற்ற பள்ளிக் கல்வித்துறை சாா்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.


No comments:

Post a Comment

Post Top Ad