ஈரோடு கிழக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். இதில் பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக வரும் மார்ச் மாதம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (பிப்.25) முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு பிரச்சாரம் செய்துவருகிறார். ஈரோடு சம்பத் நகரில் காலை 9 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்கினார் முதல்வர் மு.க. ஸ்டாலின். தொடர்ந்து பெரியவலசு, பாரதி தியேட்டர் சாலை, பேருந்து நிலையம், மஜித் வீதி வழியாக கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே பேசினார்.
அப்போது அவர், "ஈரோடு கிழக்கு தொகுதியில் நமது அணியின் சார்பில் வெற்றி பெற்று, சிறப்பாக பணிபுரிந்து வந்த திருமகன் ஈவெரா மறைந்த சூழலில், அந்த இடத்தை பூர்த்தி செய்ய, அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தர வேண்டும். திமுகவின் அடித்தளமே ஈரோடுதான். கருணாநிதி பிறந்தது திருவாரூராக இருந்தாலும் குருகுலமாக இருந்தது ஈரோடு.
பொதுத்தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே முதன்முறையாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், உங்கள் தொகுதியில் முதல்வர், நான் முதல்வன், பத்திரிகையாளர் நல வாரியம் கலைஞர் எழுதுகோல் விருது, முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு, பெரியாரின் பிறந்தநாளை சமூகநிதி நாளாக அறிவிப்பு என பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றும் வகையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றியுள்ளது.
நாங்கள் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக, தவறான தகவலைத் தெரிவிக்க விரும்பவில்லை. இந்த ஆட்சியில் எதையும் செய்யவில்லை என்று கூறும் எதிர்க்கட்சித் தலைவர் படித்துப் பார்க்க வேண்டும் இவையெல்லாம் உண்மையா என சம்மந்தப்பட்டவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
திமுக தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ள பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ 1000 உரிமைத் தொகையை, நிதிநிலைமை சரியாக இருந்திருந்தால், உடனே வழங்கி இருப்போம். இருப்பினும், மார்ச் மாதம் நிதி நிலை அறிக்கையில், பெண்களுக்கான உரிமைத் தொகை ரூ 1000 எப்போது வழங்கப்படும் என அறிவிக்கவுள்ளோம். என் காலத்திலேயே நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதே என் லட்சியம்,
இந்த ஆட்சி முறையாக நடக்கிறதா என்பதை எடை போடும் தேர்தலாக இந்த இடைத்தேர்தல் நடக்கிறது. எனவே, வாக்காளர்கள் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும். கடந்த தேர்தலில் திருமகன் ஈவெரா 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழக்குமளவிற்கு வெற்றி அமைய வேண்டும்" என்று பேசினார்.
முன்னதாக, சம்பத் நகர் பிரதான சாலையில் பயணித்தபோது, பிரச்சார வேனில் இருந்து இறங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுடன் சாலையோரம் வரவேற்பு அளித்த பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து கே.என்.கே. சாலை, மூலப்பட்டறை வழியாக பிராமண பெரிய அக்ரஹாரம் செல்லும் முதல்வர், அங்கு காலை 12 மணிக்கு பேசுகிறார். தொடர்ந்து, சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகைக்கு திரும்புகிறார். மாலை 3 மணிக்கு முனிசிபல் காலனியில் பேசும் முதல்வர் ஸ்டாலின், பன்னீர் செல்வம் பூங்கா வழியாக பெரியார் நகர் சென்று மாலை 3.45 மணிக்கு தனது பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.
No comments:
Post a Comment