இட ஒதுக்கீடு என்றால் என்ன? இட ஒதுக்கீடு ஏன் வேண்டும்? - Asiriyar.Net

Monday, February 27, 2023

இட ஒதுக்கீடு என்றால் என்ன? இட ஒதுக்கீடு ஏன் வேண்டும்?

 
இன்றைய பெரும்பாலான படித்த இளைஞர்களுக்கும் இட ஒதுக்கீடு பற்றிய புரிதல் கேள்விகுறியாகத்தான் இருக்கிறது. எவ்வளவுதான் நண்பனாக பழகினாலும் தான் சாதி பார்க்க மாட்டேனு கூறிக்கொண்டே மாப்ளே நீங்க என்ன ஆளுகனு கேட்குற கூட்டம் இருந்துகிட்டேதான் இருக்கு.*


*சரி - இட ஒதுக்கீடு தேவையா, இல்லையா.?என்பதைப் பற்றி விவாதிப்பதற்கு முன் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதற்கான காரணங்களை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.இட ஒதுக்கீடு என்பதன் நோக்கம், பல காலமாகஆதிக்க சாதியினரின் ஒடுக்குமுறைகளை சந்தித்து வரும் மக்களின் பொருளாதார நிலையை முன்னேற்றுவது மட்டும் அல்ல, அவர்களது சமூக அந்தஸ்த்தை முன்னேற்றுவதும் தான்.* 


*அனைத்து தாழ்த்தப் பட்டவர்களும் பொருளாதார ரீதியாக முன்னேறிவிடவில்லை என்பது ஒருபக்கமிருந்தாலும், பொருளாதார ரீதியாக முன்னேறிய சிலரே தனக்குரிய சமூக அந்தஸ்த்தை பெறவில்லை என்பது தான் வேதனையான உண்மை. உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த ஒருவரே தான் தாழ்த்தப்பட்டவன் என்பதற்காக என்னை அனைவரும் ஒதுக்குகிறார்கள் என்று புகார் செய்திருக்கிறார். உயர்ந்த நிலையில் உள்ள நீதிபதிக்கே இந்த நிலைமை என்றால், கிராமத்தில் இருக்கும் சாதாரண மக்களுக்கெதிரான சாதிவெறி எப்படி இருக்கும் என்பதை நம்மால் எண்ணிப்பார்க்க முடியும். 


இப்பொழுதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள் என்று மேம்போக்காக சொல்லும் மனிதர்களில் எத்தனை பேருக்கு, சாதி வெறியினால் தாழ்த்தப்பட்டவர் ஒருவரின் வாயில் மலத்தை கரைத்து ஊற்றிய சம்பவம் சமீபத்தில் தமிழகத்தில் நடந்தது என்பது தெரியும்? 


இதே தமிழகத்தில் தான் தேர்தலில் தேர்ந்தெடுத்த பின்னும் தாழ்த்தப்பட்டவர் என்கிற ஒரே காரணத்தால் செயல்பட விடாமல் செய்த சம்பவமும் நடந்திருக்கிறது. அதுவும் சமீபத்தில்... ஹிந்து மதத்திலிருந்து மதம் மாறியவர்களில் பெரும்பாலானவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற செய்திக்குள் மறைந்திருக்கும் சாதி வெறியை உங்களால் உணர்ந்து கொள்ள முடியவில்லை என்றால் நீங்கள் உண்மையில் முட்டாளாக தான் இருக்க முடியும்.* 


*ஒருவன் குறைந்த மதிப்பெண் வாங்கினாலும் தாழ்த்தப்பட்டவன் என்கிற ஒரே காரணத்தால் தகுதி பெற்று விடுகிறான். அதிக மதிப்பெண் வாங்கினாலும் ஆதிக்க சாதி என்ற காரணத்தால் ஒருவரால் தகுதி பெற முடியவில்லை என்று பலரும் சொல்லி கேள்விபட்டிருக்கிறேன் இதனை சற்று எளிமையாக புரிய வைக்க முயல்கிறேன் வாருங்கள்.ஒரு ஓட்டப்பந்தயம் நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். 


 அதில் இருவர் கலந்து கொள்கிறார்கள். ஒருவர் நல்ல ஷூ போட்டிருக்கிறார், மிகுந்த பயிற்சி எடுத்திருக்கிறார், அவரை சுற்றியவர்கள் அனைவரும் சிறந்த வீரர்கள், அவர்களிடமிருந்து நல்ல ஆலோசனைகளைப் பெற்றுருக்கிறார். இன்னொருவரோ, போட்டிக்கு மிகவும் புதியவர். அவருக்கு நல்ல துணிமணிகள் கூட கிடையாது, வெறும் காலுடன் வந்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் அவர் போட்டிக்கு வந்ததே அதிசயம்தான். 


அப்படி இருக்கும் போது இருவரையும் ஒரே கோட்டில் நிறுத்துவதென்பது நியாயமாகுமா? இவரையும் கொஞ்சம் கொஞ்சமாக ஜெயிக்க வைத்தால் தானே அவர் தனது தகுதியை வளர்த்துக்கொள்ள முடியும்.இதே போல் தான் கல்வித்துறையில், தாழ்த்தப் பட்டவர்கள் இருக்கிறார்கள். இட ஒதுக்கீடு தாழ்த்தப்பட்ட நபர்களுக்கு தான் பயன் என்று கூறும் நபர்கள் தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீட்டை பாருங்கள்.*


*இந்த படத்தில் ஒட்டுமொத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இருக்கும் சாதி வாரியாக இருக்கும் மக்கள்.இது அந்த அந்த சாதிக்கான இட ஒதுக்கீடு.* *ஆச்சரியமாக உள்ளதா உயர் சாதி என்று கூறும் வகுப்புகளுக்கு அதிக இட ஒதுக்கீடு இருக்கிறதா? 


ஆம் ஆனால் தாழ்ந்த சாதி என்று கூறுபவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றால் வேலை கிடைத்துள்ளது என்றுதானே கேட்கிறீர்கள் நான் முன்பு சொன்னது போல அந்த அந்த சாதியில் இருக்கும் குறிப்பிட்ட ஒதுக்கீட்டில் யார் அதிக மதிப்பெண் பெறுகின்றனரோ அவர்கள் தகுதி பெற்று விடுவர் அவ்வளவுதான்.இதில் ஆதிக்க சாதியினருக்கு கிடைக்கும் அனைத்து வசதிகளும் கிடைத்து, இட ஒதுக்கீட்டை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிக சொற்பமே தனக்கு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்பதற்காக இட ஒதுக்கீடே வேண்டாம் என்று கூறுவது சரியல்ல. 


தனிப்பட்ட அனுபவத்தை வைத்து சமூக பிரச்னை தீர்வு காண நினைப்பது மூடத்தனம்.சாதிக் கொடுமையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கொண்டு வந்து அவர்களை பொருளாதார ரீதியாகவும் சமூக அந்தஸ்து ரீதியாகவும் இப்பொழுது சற்றே மேலே கொண்டுவந்த இட ஒதுக்கீட்டையும் எடுத்து விட்டால் பின் எதை வைத்து இவர்களுக்குரிய சமூக அந்தஸ்த்தை பெற்றுத் தருவார்கள் என்பது எனக்கு சுத்தமாக விளங்கவில்லை. 


*இட ஒதுக்கீடு வேண்டாம் என நீங்கள் நினைத்தால் நீங்கள் உங்கள் சாதியை மாற்றிக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் அப்படி எத்தனை பேர் முன் வருவீர்கள்.?இட ஒதுக்கீடு என்பது ஒரு நாள் தூக்கி எறியப்படவேண்டிய ஒன்று தான். ஆனால் அது தூக்கி எறியப்படவேண்டியதற்கான சூழ்நிலை இன்னும் வரவில்லை என்பதே எனது கருத்து. 


எல்லாம் சரி பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று சொல்பவர்களுக்கு..ஒருவரின் பொருளாதாரத்தை எதைக் கொண்டு நிர்ணயிப்பீர்கள்? இன்று பொருளாதார ரீதியாக பின்னால் இருப்பவர் ஒரு வருடத்தில் முன்னேறிவிடலாம். ஒருவரது பொருளாதார முன்னேற்றத்தை கணக்கிட அரசு சார்பில் குடும்பத்திர்க்கொருவரை பணி நியமனம் செய்து விடலாமா?ஒருவர் பணம் இல்லாமல் இருக்கிறார் என்பதால் அவருக்கு எதிரான வன்முறைகள் தொடுக்கப்படுவதில்லை. 


ஒருவர் இன்ன சாதியை சேர்ந்தவர் என்பதால் தான் அடக்குமுறைகளும் வன்முறையையும் ஏவப்படுகிறது. புண் காலில் இருக்கும் போது மருந்தை கையில் போடச் சொல்வது எப்படி சரியாகும்?தன்னுடையது உயர்ந்த சாதி என்றும் மற்றொருவர் தாழ்ந்த சாதி என்றும் உயர்வு தாழ்வு பார்க்கும் சமூகம் இருக்கும்வரை இந்த இட ஒதுக்கீடு கட்டாயம் வேண்டும். என்று இந்த சமூகம் சாதி எனும் சாக்கடையை தூக்கி வீசுகிறதோ அன்றுதான் இட ஒதுக்கீடும் தூக்கி எறியப்படும் இதைத்தான் டாக்டர் - அம்பேத்கார் அன்றே கூறினார்.Post Top Ad