சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை டிடிவி தினகரன், சீமான் ஆகியோர் சந்தித்து, ஆதரவு தெரிவித்தனர். ஊதிய முரண்பாடு களையப்படும் என்ற அறிவிப்பு வரும் வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ல் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ம் தேதி பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, சம வேலைக்கு சமஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 5 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை சந்தித்து, ஆதரவு தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த பின்னர் கோரிக்கையை நிறைவேற்றாதது சரியல்ல. அவர்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், மக்களைத் திரட்டிப் போராடுவோம்’’ என்றார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், போராட்டக் குழுவினரை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘உடனடியாக ஆசிரியர்களை அழைத்துப் பேசி, அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்’’என்றார்.
இந்நிலையில், கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு முன்வராததால், போராட்டத்தை மேலும்தீவிரப்படுத்த இடைநிலை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து எஸ்எஸ்டிஏ பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் கூறும்போது, ‘‘இது அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல. நினைவூட்டும் போராட்டம்தான். கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தவில்லை. எப்போது நிறைவேற்றுவார்கள் என்றுதான் கேட்கிறோம். நிலுவைத்தொகைகூட வேண்டாம். எங்களை சந்திக்காவிட்டாலும், ஓர் அறிக்கையையாவது முதல்வர் வெளியிட வேண்டும். ஊதிய முரண்பாடு களையப்படும் என்ற அறிவிப்பு வந்தவுடன் போராட்டத்தை முடித்துக் கொள்வோம். அதுவரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment