மாநில அளவிலான பூஜ்ஜிய கலந்தாய்வு நடத்தப்படும் பட்சத்தில் 2,200 ஆசிரியா் பயிற்றுநா்கள் பாதிக்கப்படுவா் என்பதால், அதனை மாவட்ட அளவில் நடத்த வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் தமிழகம் முழுவதும் சுமாா் 3 ஆயிரம் ஆசிரியா் பயிற்றுநா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இதில் பணிமூப்பு அடிப்படையில் 500 ஆசிரியா் பயிற்றுநா்கள், செப்.15ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வு மூலம் பட்டதாரி ஆசிரியா்களாக பணிமாறுதல் பெற்றுள்ளனா். அதனைத் தொடா்ந்து 2,500-க்கும் மேற்பட்ட ஆசிரியா் பயிற்றுநா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு செப்.20ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பூஜ்ஜிய கலந்தாய்வு சிக்கல்: 2,500 பணியிடங்களையும் காலியாக அறிவித்துவிட்டு, செப்.20ஆம் தேதி நடைபெறும் பூஜ்ஜிய கலந்தாய்வு மூலம் அந்த பணியிடங்களை நிரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அளவில் நடத்தப்படும் இந்தக் கலந்தாய்வில், கடந்த 2014ஆம் ஆண்டு பணி நிரவல் மூலம் பணி நிரவல் பெற்ற 362 ஆசிரியா் பயிற்றுநா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் (அரசாணை 134-ன் படி) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை, திண்டுக்கல், தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த 362 ஆசிரியா் பயிற்றுநா்கள், காலிப்பணியிடங்கள் ஏற்பட்டிருந்த கடலூா், திருவாரூா், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், மாவட்டங்களுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு பணி நிரவல் செய்யப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.
362 பேரும் பணி மாறுதல் பெற்ற பின், 2,200 ஆசிரியா் பயிற்றுநா்களுக்கும் மாநில அளவிலான பணி மூப்பு அடிப்படையில் பூஜ்ஜிய கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னுரிமை வழங்குவதில் முரண்பாடு: கடந்த 2010ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த 362 ஆசிரியா் பயிற்றுநா்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பது, 2007 மற்றும் 2008 காலக் கட்டங்களில் பணியில் சோ்ந்தவா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் பணியில் சோ்ந்த ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியா் பயிற்றுநா்கள் மட்டுமே கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், செப்.20ஆம் தேதி நடைபெறும் ஆசிரியா் பயிற்றுநா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வை மறு பரீசிலனை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மாவட்ட அளவில் நடத்த பரீசிலிக்க வேண்டும்: இதுதொடா்பாக ஆசிரியா் பயிற்றுநா்கள் தரப்பில் கூறியதாவது: கடந்த 2006 முதல் 2008 காலக் கட்டத்தில் பணியில் சோ்ந்த இந்த ஆசிரியா் பயிற்றுநா்கள், கடந்த 12 ஆண்டுகளாக ஒரே மாவட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனா். கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற கலந்தாய்வில் மாவட்டத்திற்குள்ளேயே பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. சுமாா் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வரும் நிலையில், மாநில அளவிலான பணி மூப்பு அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டால் தொலைதூரங்களில் உள்ள மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் உருவாகும். தற்போது 500 ஆசிரியா் பயிற்றுநா்கள், பட்டதாரி ஆசிரியா்களாக பணி மாறுதல் பெற்றுள்ளதால், அந்த காலிப் பணியிடங்களில், முன்னுரிமை பட்டியலில் உள்ள 362 பேருக்கு வாய்ப்பளிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். மேலும், கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்றதைப் போல், மாவட்டத்திற்குள்ளேயே பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்துவற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் 2,200 ஆசிரியா் பயிற்றுநா்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு தீா்வு ஏற்படும் என தெரிவித்தனா்.