பள்ளிகள் திறந்தபின் ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும்? - Asiriyar.Net

Saturday, October 30, 2021

பள்ளிகள் திறந்தபின் ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும்?

 


பள்ளிகள் திறந்தபின் ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும்?



பள்ளிக்கு வரும் மாணவர்களில் சிலர் மன அழுத்தம், பதற்றம், அச்சம், சோகம் போன்ற மனச்சிக்கல்களுடன் இருக்கலாம். சிலர் வீட்டில் நிகழ்ந்த வன்முறைகளாலோ இழப்புகளாலோ பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். இத்தகைய குழந்தைகளைப் புரிந்துகொண்டு அவர்களை இயல்புநிலைக்குக் கொண்டுவரும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு, கற்றலையும் மாணவர்களின் உணர்வுச் சமநிலையையும் உறுதிசெய்ய உதவும் எளிய வழிமுறைகள்: . 


செவிகொடுங்கள்

மாணவர்களின் குறைகளை அக்கறையுடன் கேட்பதும், அதைப் பரிவுடன் அணுகுவதுமே ஒரு ஆசிரியராக உங்கள் முன் இருக்கும் தலையாய பணி. ஒவ்வொரு மாணவரும் தனியாகச் சந்தித்து உரையாடுவதற்கு வாய்ப்பு கொடுங்கள். கவலைகொள்ள வைக்கும் அளவுக்கு முக்கியமான விஷயத்தை மாணவர்கள் பகிர்ந்தால், தாமதிக்காமல் உரியவர்களின் கவனத்துக்கு எடுத்துச்செல்லுங்கள்.


சுவனியுங்கள் 

மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் முன்னர், அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள நேரம் ஒதுக்க வேண்டும். சிலருக்குக் கவனம் செலுத்துவதில் சிரமம் இருக்கலாம், கற்றலின் வழக்கமான நிலைக்குத் திரும்ப அதிக காலம் தேவைப்படலாம். மாணவர்கள், ஓய்வெடுக்கவும், பள்ளிகளில் நிம்மதியாக உலவவும், நண்பர்களுடன் மீண்டும் இணையவும் தேவைப்படும் வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுங்கள். 



சரியான தகவல்களைத் தெரிவியுங்கள்

கோவிட்-19 பற்றிய மாணவர்களின் கேள்விகளுக்குத் துல்லியமாகப் பதிலளிக்க, அறிவியல் சான்றுகளின் அடிப்படையில், குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற ஆதாரங்களைப் பயன்படுத்துங்கள். கரோனா அபாயங்களைக் குறைக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தெரிவியுங்கள். அவற்றைப் பின்பற்ற வலியுறுத்துங்கள். வகுப்பறையில் கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டால் என்ன செய்வது என்பது உட்படப் பள்ளிப் பாதுகாப்பு நெறிமுறைகளைக் குழந்தைகளுக்கு நினைவூட்டுங்கள். 



ஆலோசனை கேளுங்கள்

வகுப்பறையைப் பாதுகாப்பானதாகவும் வசதியான இடமாகவும் மாற்றும் முயற்சியில் மாணவர்களை ஈடுபடுத் துங்கள். ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளைக் குழந்தைகளும் உங்களுக்கு வழங்கலாம்; வகுப்பறையின் சுவர்களை வண்ணமயமானதாகவும் வரவேற்கும் செய்திகளால் அலங்கரிப்பதிலும் அவர்களை ஈடுபடுத்துங்கள். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பது, எந்தவொரு சவாலையும் எளிதில் சமாளிக்க உதவும் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். குழந்தைகளின் பங்களிப்புகளையும் முயற்சிகளையும் பாராட்ட மறக்காதீர்கள். 


முன்மாதிரியாக இருங்கள்

ஆசிரியர்களே மாணவர்களுக்கு நேர்மறையான முன்மாதிரி. உங்களைப் பார்த்து, மன அழுத்தச் சூழ்நிலை களைச் சமாளிக்கத் தேவைப்படும் திறன்களை மாணவர்கள் கற்றுக்கொள்வார்கள். எனவே அமைதியாகவும், நேர்மை யாகவும், அக்கறையுடனும் இருங்கள், மாணவர்களிடம் நேர்மறையான அணுகுமுறையை வெளிப்படுத்துங்கள்.








Post Top Ad