ஆன்லைன், நேரடி வகுப்புகள் - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் யோசனை - Asiriyar.Net

Friday, October 22, 2021

ஆன்லைன், நேரடி வகுப்புகள் - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் யோசனை

 





கொரோனா தொற்று பரவல் தொடங்கியது முதல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு, ஆன் லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆன் லைன் வகுப்புகளில் கலந்துகொள்ளும் மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவதால் உயர் கல்வி பெறும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கும், ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளித்து கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தி, வகுப்புகளை மீண்டும் தொடங்க உத்தரவிடக் கோரி நேர்வழி இயக்கம் அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.



அந்த மனுவில், நாட்டில் 23.8 சதவீத வீடுகளில் மட்டுமே இணைய தள இணைப்புகள் உள்ளது.  10.7 சதவீத வீடுகளில் மட்டும் கணிப்பொறி வசதிகள் உள்ளது. 130 கோடி மக்கள்தொகையில் 30 கோடி மக்களிடம் மட்டுமே ஸ்மார்ட்போன்கள் உள்ளது என்று கடந்த  2017ல் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் அனைத்து மாணவர்களும் ஆன் லைன் வகுப்புகளில் கலந்துகொள்ளும் வசதியை பெற்றிருக்கவில்லை. பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி, பொறியியல், சட்டம், மருத்துவம், கட்டிடக் கலை படிப்புகளை ஆன் லைன் மூலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தொடர் ஊரடங்கு காரணமாக பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணாக ஆன் லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டிருந்தது.


இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, பள்ளி, கல்லூரிகளும், நீதிமன்றமும் ஆன்லைன் மூலம் நடத்தப்படுவதால் பல சாதகங்களும், பாதகங்களும் உள்ளன என தெரிவித்தனர். உடல் நலம் சரியில்லாத, மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஆன் லைன் வகுப்புகளை தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்க வேண்டும். எந்தெந்த நாளில் நேரடி வகுப்பு நடத்தப்படும், எந்தெந்த நாளில் ஆன் லைன் வகுப்பு நடத்தப்படும் என்பதை அறிவித்து, அதற்கான விதிகளை வகுக்க வேண்டும். கலப்பு முறையில் நேரடி மற்றும் ஆன் லைன் வகுப்புகளை நடத்தலாம். கொரோனா மூன்றாவது அலைக்கு வாய்ப்பில்லை என்று அறிக்கைகள் வெளியாவதால், கல்வி எளிதில் அணுகக் கூடிய வகையில் மாணவர்களுக்கு ஆன் லைன் மூலமும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம் என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.



No comments:

Post a Comment

Post Top Ad