பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வீட்டிலிருந்து படிப்பது மாணவர்களுக்கு இயல்பாகி இருக்கக்கூடும். இதனால், பெற்றோரைப் பிரிந்து பள்ளி செல்வதும், பாதுகாப்பான, பழகிய சூழலிருந்து மற்றவர்கள் கூடும் பள்ளிக்குச் செல்வதும் நண்பர்களைச் சந்திப்பதும் சில குழந்தைகளுக்கு அச்சம் அளிப்பதாக இருக்கலாம். இந்த மனத்தடையை அகற்றி அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்குப் பெற்றோர் செய்ய வேண்டிய ஐந்து எளிய வழிமுறைகள்:
அன்றாட நடவடிக்கைகள்
கரோனா பொதுமுடக்கத்தால், மாணவர்களின் அன்றாட நடவடிக்கைகள் சீர்குலைந்து இருக்கின்றன. பள்ளிகள் திறக்கப்பட உள்ள சூழலில், அவர்களின் பழக்கவழக்கங்களை கரோனாவுக்கு முந்தைய நிலைக்கு மாற்றியமைப்பது அவசியம். ஒரு நிலையான, குறித்த நேரத்தில் உறங்க வைப்பது, விழிக்கச் செய்வது, சாப்பிடச் செய்வது போன்ற மாற்றங்களுக்குக் குழந்தைகளைப் பெற்றோர் மெதுவாகப் பழக்கப்படுத்த வேண்டும். இதைக் கண்டிப்புடன் அமல்படுத்தாமல், அவர்களிடம் பேசிப் புரிய வைத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
நேரம் கொடுங்கள்
பள்ளிக்குச் செல்வதால், மாணவர்களுக்கு உற்சாகமோ, மனச்சோர்வோ, அச்சமோ கவலைக்கு உள்ளாக்கும் பிற உணர்வுகளோ ஏற்படலாம். குழந்தைகளுக்கு வீடே பாதுகாப்பான இடம். எனவே, விரக்தி, சோர்வு, பயம் போன்ற எதிர்மறை எண்ணங்களை வீட்டில் வெளிப்படுத்தவும்பகிர்ந்துகொள்ளவும் குழந்தைகளுக்கு உதவுங்கள். பொறுமையுடன் கேட்பதே அவர்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும், ஆசுவாசப்படுத்தும்.
கவலைகளை அங்கீகரியுங்கள்
கரோனா காலத்தில் பள்ளிக்குச் செல்வது குறித்த அச்சத்தைக் குழந்தைகள் வெளிப்படுத்தினால், அதை அக்கறையுடன் அணுகுங்கள். நீங்களும், ஆசிரியர்களும் அவர்களைப் பொறுப்புடன் பார்த்துக்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். அவர்களின் அச்சத்துக்கான காரணம் எதுவாக இருந்தாலும், அதை அங்கீகரித்துக் குழந்தைகளின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள். -
பரிவு காட்டப் பழக்குங்கள்
கரோனா காலத்தில் ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு விதமான அனுபவங்களை, சவால்களை, இன்னல்களை எதிர்கொண்டிருக்கக்கூடும். பிறரின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வதற்கு உங்கள் குழந்தையைப் பழக்குவது, பிற மாணவர்களின் நிலையை அவர்கள் புரிந்துகொண்டு, பரிவுடன் அணுக உதவும். அவர்களுக்கு நல்ல நட்பையும் ஏற்படுத்திக்கொடுக்கும்.
நம்பிக்கையை விதையுங்கள்
சூழல் எவ்வளவு சவாலானதாக இருந்தாலும், அந்தச் சூழலுக்கு ஏற்றவாறு குழந்தைகள் எளிதில் தகவமைத்துக் கொள்வர். பள்ளிகளில் மகிழ்ச்சியாக இருந்த தருணங்களைக் குழந்தைகளுக்கு நினைவூட்டுங்கள். அது அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும். பள்ளி செல்லும் ஆவலை அதிகரிக்கும். பள்ளியிலிருந்து திரும்பும் குழந்தையின் நடத்தையில் குறிப்பிடத்தக்க மாற்றம் தெரிந்தால், உடனே பள்ளியைத் தொடர்புகொள்ளுங்கள். தேவைப்பட்டால் மருத்துவ உதவியைப் பெறத் தயங்காதீர்கள்.