அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு தரமான, சமமான கல்வி கிடைக்க தொடக்கக் கல்வி நிலையில் முழுமையான கற்றல் வாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்த கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் சு.மூர்த்தி வெளியிட்ட அறிக்கையில், "கல்வித் துறை அரசாணை எண் 250-ன் படி, தமிழக அரசுப் பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்புகளில் இருந்தே 20 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட்டார்கள். 20 மாணவர்களுக்கு ஒரு வகுப்பு என்ற நிலை இருந்தது. 33 ஆண்டுகளாக இருந்த நடைமுறை, அரசாணை எண் 525-ன் படி 40 குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியர் என்று மாற்றப்பட்டது. இதனால், 1997-க்குப் பிறகு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனக் குறைப்பு நடந்தன. ஓர் ஆசிரியர் இரண்டு மூன்று வகுப்புகளுக்கு சென்று அனைத்துப் பாடங்களையும் கற்பிக்கும் நிலை ஏற்பட்டது.
தொடக்கக் கல்வி பயிலும் பெரும்பாலான குழந்தைகளுக்கு அடிப்படைத் திறன்களில் கற்றல் அடைவுகள் குறையத் தொடங்கியதால், பலர் இடைநிற்றலுக்கும் ஆளாயினர். ஓரளவு வசதி படைத்தவர்கள் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கத் தொடங்கினர். அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் எண்ணிக்கை குறையவும், தனியார் பள்ளிகளில் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிக்கவும் ஆசிரியர் நியமனக் குறைப்பு மூலமாக வழி செய்யப்பட்டது.
கல்வி உரிமைச் சட்டம்-2009 நடைமுறைக்கு வந்த பிறகு தொடக்கப் பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர், நடுநிலைப் பள்ளிகளில் 35 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் நியமிக்கப்படுகிறார்கள். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பெரும்பாலும் ஓர் ஆசிரியர் இரண்டு, மூன்று வகுப்புகளுக்கு அனைத்துப் பாடங்களையும் கற்பிக்கும் நிலை உள்ளது.
இச்சூழலில் 2012-ம் ஆண்டிலிருந்து அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கில மொழித் திறன் வளர ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. ஆனால், ஆங்கில வழிப் பிரிவுகளுக்கு இன்று வரை கூடுதல் ஆசிரியர் நியமிக்கப்படாததால் அரசுப் பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழித் திறன் வளர வழி ஏற்படவில்லை. தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கவில்லை. போதுமான ஆசிரியர் நியமிக்கப்படாததன் விளைவுதான் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட இளநிலை தொழில் முறை பட்டப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்ற வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது.
தொடக்கக் கல்வி நிலையில் குழந்தைகளுக்கு முழுமையான கற்றல் வாய்ப்புகள் அவசியமானது. போதுமான ஆசிரியர் இருந்தால் மட்டுமே குழந்தைகள் எதிர்பார்க்கும் கற்றல் அடைவுகளைப் பெற முடியும். முழுமையான கற்றல் அடைவுகளைப் பெற முடியாத குழந்தைகளே பெரும்பாலும் இடைநிற்றலுக்கும் ஆளாகிறார்கள். கல்வியைத் தொடரும் குழந்தைகளும் பள்ளி இறுதி வகுப்பு வரை கல்வியில் பின்தங்கிய நிலைக்கு ஆளாகிறார்கள். எனவே தொடக்கக் கல்வி நிலையில் முழுமையான கற்றல் வாய்ப்புகளை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டம் 2009-ல் வலியுறுத்தப்பட்ட முதன்மை இலக்கு இதுதான். அரசுப் பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர், பாடத்துக்கு ஓர் ஆசிரியர் இல்லாமல் குழந்தைகள் முழுமையான கல்வி அடைவுகளைப் பெறச் செய்ய முடியாது.
தற்போது 10 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆசிரியர் வேலைக்கு வழி இன்றி உள்ளனர். மற்றொரு புறம் அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர் இல்லாத நிலை உள்ளது. எனவே, அரசுப் பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர், பாடத்துக்கு ஓர் ஆசிரியர் மற்றும் கூடுதல் கலைத்திட்டச் (Extra Curricular Activities) செயல்பாடுகளுக்கான ஆசிரியர்களை நியமனம் செய்வது மட்டுமே இரண்டு சிக்கல்களுக்குமான தீர்வாக அமையும். ஏழைக் குழந்தைகளுக்கு தரமான, சமமான கல்வியை உறுதி செய்ய தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.