போலி நியமன ஆணை - பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களிடம் காவல்துறை விசாரணை! - Asiriyar.Net

Tuesday, October 12, 2021

போலி நியமன ஆணை - பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களிடம் காவல்துறை விசாரணை!

 




தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு தேர்வுத் துறையில் இளநிலை பணியாளர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், பணி வேண்டுமென்றால் இரண்டு லட்சம் ரூபாய் கமிஷன் தர வேண்டும் எனவும் கூறி, தலா 50 ஆயிரம் ரூபாய் வரை முன் பணம் பெற்றுள்ளனர். பின் சான்றிதழ்களின் நகல்கள் பெற்று, அவர்களுக்கு போலி நியமன ஆணை வழங்கியுள்ளனர்.


இந்நிலையில், வீட்டில் இருந்து பணியாற்றினால் போதும், வங்கிக் கணக்குக்கு மாதந்தோறும் சம்பளம் வரும் என்று கூறி ஒரு கும்பல் ஆசை வார்த்தை கூறியுள்ளது.



உறுதியளித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி


இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்கள், செய்திகள் மூலமாக அலுவலர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.இதனையடுத்து இந்த மோசடி குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அவரும் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 4ஆம் தேதி சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் புகார் ஒன்றை சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ளார். இந்தப் புகாரை மத்தியக் குற்றப்பிரிவில் உள்ள மோசடி தடுப்பு பிரிவு அலுவலர்கள் தற்போது விசாரணை செய்து வருகின்றனர். 


பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளதா?


அதில் முதற்கட்டமாக வாட்ஸ்அப் மூலம் வந்த போலி நியமன ஆணைகள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். பள்ளிக்கல்வித்துறையில் முதன்மைக் கல்வி அலுவலரின் கையெழுத்து மற்றும் சீல் ஆகியவற்றை வைத்து எவ்வாறு மோசடி செய்து உள்ளார்கள் என்பது குறித்து தொடர்புடைய பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களிடம் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.


இந்த மோசடி விவகாரத்தில் பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விசாரணையின் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்களை அடிப்படையாக வைத்து பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை எடுத்து அதன்மூலம் மோசடி கும்பலை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.




No comments:

Post a Comment

Post Top Ad