சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்கக அலுவலகத்திற்கு கடந்த 21ம் தேதி பட்டதாரி இளைஞர்கள் பலர் வந்துள்ளனர். அப்போது மோசடி கும்பல் ஒன்று பட்டதாரி இளைஞர்களிடம் தமிழக பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு தேர்வு துறையில், இளநிலை பணியாளர் பணி உள்ளதாகவும், கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் பணி செய்ய வேண்டும் என்றும், இந்த வேலைக்காக தங்களுக்கு 2 லட்சம் கமிஷனாக கொடுத்தால் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர்.அதை நம்பிய பட்டதாரிகளிடம் அந்த மோசடி கும்பல் வேலை பெற்று தருவதற்காக பலரிடம் முன்பணமாக 50 ஆயிரம் வரை பெற்றுள்ளனர். பிறகு முன் பணம் கொடுத்த பட்டதாரிகளை தொடர்பு கொண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்கக வளாகத்திற்கு (டிபிஐ) வரவழைத்துள்ளனர். அப்போது பணி நியமன ஆணைகள் வழங்க உள்ளதால் மீதமுள்ள பணத்தை கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளனர். அதை நம்பி பட்டதாரிகள் பலர் மோசடி கும்பல் கூறியபடி பள்ளிக்கல்வி இயக்ககம் அமைந்துள்ள டிபிஐ வளாகத்திற்கு பணத்துடன் வந்துள்ளனர்.
பிறகு மோசடி நபர்கள் இளநிலை பணியாளர் பணிக்கான போலி பணி நியமன ஆணைகளை தயாரித்து பணம் கொடுத்த பட்டதாரிகளை நேரில் அழைத்து கொடுத்துள்ளனர். அப்போது பணியில் சேருவதற்கான கையெழுத்தும் வாங்கி உள்ளனர். இது அனைத்தும் டிபிஐ வளாகத்தில் நடந்துள்ளது.
போலி பணி நியமன ஆணைகளை எடுத்துக்கொண்டு, சென்னை முதன்மை கல்வி அதிகாரி மார்க்ஸை பட்டதாரிகள் சந்தித்துள்ளனர். அப்போது தான் பட்டதாரிகளுக்கு அது போலியான பணி நியமன ஆணைகள் என்றும், தாங்கள் ஏமாற்றப்பட்டதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பட்டாரிகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தி மோசடி குறித்து புகார் அளிக்க சென்னை முதன்மை கல்வி அதிகாரி மார்க்ஸ்க்கு அவர் உத்தரவிட்டார். அதன்படி சென்னை முதன்மை கல்வி அதிகாரி மார்க்ஸ் விசாரணை நடத்திய போது, மோசடி கும்பல் டிபிஐ வளாகத்திலேயே பட்டதாரிகளை நேரில் வரவழைத்து போலி பணி நியமன ஆணைகள் வழங்கி மோசடி செய்தது தெரியவந்தது.அதைதொடர்ந்து சென்னை முதன்மை கல்வி அதிகாரி மார்க்ஸ் ஆன்லைன் மூலம் போலீஸ் கஷினர் சங்கர் ஜிவாலுக்கு புகார் அளித்தார். அதன்படி விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டள்ளார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி நபர்கள் குறித்து டிபிஐ வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிபிஐ வளாகத்திலேயே பட்டதாரிகளை நேரில் வரவழைத்து போலி பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment