”ஆசிரியர்களின் காலி பணியிடங்கள் குறித்த அட்டவணை, இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்,” என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், டி.என்.,பாளையம் அருகே கொங்கர்பாளையத்தில், அவர் கூறியதாவது: தமிழக சட்டசபை தேர்தல் அட்டவணையை, தேர்தல் கமிஷன் வெளியிட்டதும், பொதுத் தேர்வுக்கான முடிவு மேற்கொள்ளப்படும். தேர்தல் சமயத்தில், சில பள்ளிகள் ஓட்டுச்சாவடிகளாக இருந்தால், அங்கு தேர்வர்கள் செல்ல வேண்டியிருக்கும். அதனால், தேர்தல் நாள் மற்றும் தேர்வு நாட்களை அறிந்து, பொதுத்தேர்வு அட்டவணை அறிவிக்கப்படும்.
தேர்தல் பணியில் விலக்கு கோர விரும்பும், 55 வயதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்தல் கமிஷனிடம் தெரிவித்தால்தான் சரியாக இருக்கும். தமிழகத்தில் இன்னும் பள்ளிகள் திறக்கப் படவில்லை. பள்ளி திறந்தபின், காலி பணியிடங்களை அறிந்து, ஆசிரியர் கவுன்சிலிங் நடத்த ப்படும். ஆசிரியர் காலிப்பணியிட அட்டவணை, இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும். கோவையில் கல்வி அதிகாரி, தனியார் பள்ளியில் நிதி பெற்றதாக, புகார் ஏதும் வரவில்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.