மாணவர்களுக்கு குறைந்தது ஒரு 3 மாதமாவது நேரடி வகுப்புகள் நடத்தாமல் தேர்வு நடத்துவது சரியான அணுகுமுறை கிடையாது. குறைந்தபட்சம் 3 முதல் 4 மாதங்களாவது வகுப்புகள் நடத்தி மாணவர்களுக்கு பாதி பாடத்தையாவது நடத்த வேண்டும். இப்போது தேர்வுக்காக தான் படிக்க வேண்டும். அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற நிலையில் மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகங்கள் கொண்டு செல்வது ஆபத்தான ஒன்று. படிப்பது என்பது புரிந்துகொள்வதே. புரிந்துகொண்டு அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வதே படிப்பு ஆகும்.
எது நடந்தால் எனக்கு என்ன, எனக்கு தேவை தேர்வு நடத்த வேண்டும் என்பது போல் தான் தற்போது தேர்வு குறித்த அறிவிப்புகளும் வெளியிடப்படுகிறது. கொடுக்கப்பட்ட பாடத்தை முழுமையாக படித்து புரிந்துகொண்டு அதை எப்படி வெளிக்காட்டுகிறார்கள் என்பதே தேர்வு முறையாகும். ஏதோ மதிப்பெண் கொடுப்பதற்காக மட்டும் தேர்வு கிடையாது. வெறுமனே தேர்வை மட்டும் நடத்தி என்ன சாதிக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை. இனிவரக்கூடிய காலங்களில் எத்தனை வகையான கொரோனா வரப்போகிறது என்று தெரியவில்லை. ஏற்கனவே, நிலைமை சீராகி விடும் என்று எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் லண்டனில் திடீரென உருமாறிய கொரோனா பரவி வருவது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது.
இந்த மாதிரியான சூழலில் பொதுத்தேர்வு அறிவிப்பு என்பது மாணவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துவது போன்றே இருக்கும். தேர்வு வைக்காமல் இருந்தால் மாணவர்கள் இயல்பான விஷயங்களை மிகவும் அருமையாக கற்றுக்கொள்வார்கள்.
குறிப்பாக, ஆசிரியர்கள் வாரம் ஒருமுறை தேர்வு வைத்து அதை தபால் மூலம் மாணவர்களை அனுப்ப சொல்லலாம். இந்த தேர்வில் மாணவர்களுக்கு மதிப்பெண்களை கொடுக்கலாம். ஆனால், ஆன்லைன் வகுப்புகளும், ஆன்லைன் தேர்வுகளும் இந்த வயதிற்கு ஏற்றவை கிடையாது. எந்த ஒரு சமுதாயமும் சந்திக்காத இதுபோன்ற ஒரு பேரிடர் நேரத்தில் தேர்வு பற்றி ஒரு பயத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்துவது சரியல்ல. தேர்வு என்பது அவசியமே கிடையாது.
நேரடி வகுப்புகளை சிறிது நாட்கள் நடத்தி அதன்பிறகு தேர்வு நடத்தும்போது அது மாணவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தாது. ஆனால், ஆன்லைன் வகுப்புகள் நடத்தி ஒரு தேவையற்ற தேர்வு பயத்தை ஏற்படுத்துவது சரியான ஒன்று கிடையாது. இதேபோல், அனைவரும் பாஸ் என்ற நடைமுறையை கொண்டுவரக்கூடாது. நிறைய மாணவர்கள் வீடுகளிலேயே வாழ்க்கைக்கு தேவையான கல்வியை கற்றுக்கொள்கிறார்கள். அப்படி இருக்கும் போது அதற்கு ஏற்ற வகையில் பாட திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும். கட்டுரை, சுற்றி நடந்த நிகழ்வுகள் குறித்து கட்டுரை எழுதி அதை ஆசிரியர்களுக்கு அனுப்ப சொல்லலாம்.
மொழி அறிவுக்கு ஆன்லைன் வகுப்புகள் தேவையில்லை. எப்போது சுமுகமான சூழல் வருகிறதோ, அனைவரும் வகுப்பறைக்கு சென்று பாடம் படிக்கிறார்களோ அப்போது தேர்வு குறித்து பேசலாம். அது வரை மாணவர்கள் வாழ்க்கைக்கு தேவையானவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும். ஆசிரியர்கள் வாரம் ஒருமுறை தேர்வு வைத்து அதை தபால் மூலம் மாணவர்களை அனுப்ப சொல்லலாம். இந்த தேர்வில் மாணவர்களுகு மதிப்பெண்களை கொடுக்கலாம். பேரிடர் நேரத்தில் தேர்வு பற்றி ஒரு பயத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்துவது சரியானதல்ல. தேர்வு என்பது அவசியமே கிடையாது.
* கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு பொதுத் தேர்வை நடத்தலாம்: அருமைநாதன், மாநில தலைவர், தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கம்
தனியார் பள்ளிகள் முண்டியடித்துக்கொண்டு ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பித்ததே பெற்றோர்களிடம் இருந்து கல்வி கட்டணம் வசூல் செய்ய தான். அப்படி ஆரம்பிக்கும்போது அது மாணவர்களுக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மத்திய அரசோ, மாநில அரசோ கண்டுகொள்ளவில்லை. ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களின் கல்வித்திறனை பாதிக்கும் என்பதை இவர்கள் கொஞ்சம் கூட சிந்தித்து பார்க்கவில்லை. ஆன்லைன் வகுப்புகளால் வேலைக்கு செல்லும் பெற்றோர்களும் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.
பல வீடுகளில் செல்போன், இணைய வசதி என எதுவுமே இல்லாமல் மாணவர்கள் பாடம் கற்க முடியாத நிலையை காண முடிந்தது. பல இடங்களில் ஆன்லைன் வகுப்புகள் புரியாமல் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதையும் பார்த்தோம். ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தும் ஒன்றாகவே பார்க்கப்பட்டது. ஆன்லைன் வகுப்புகளுக்கு பதிலாக மாற்று நடவடிக்கைகளை அரசு கையாள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அப்போதே கோரிக்கை விடுத்தோம். ஆனால், அரசு கண்டுகொள்ளவில்லை. ஆன்லைன் வகுப்புகள் மூலம் தரமான கல்வியை கொடுப்பதாக நினைத்து அரசு தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தி வந்தது.
இதேபோல், ஆன்லைன் வகுப்புகளால் பெற்றோர்களும் பெரும் சிரமத்தை சந்தித்தனர். மாணவர்களுக்கு செல்போனே கொடுக்ககூடாது என்று கண்டிப்பாக இருந்த பெற்றோர்கள் எல்லாம் மாணவர்களிடம் செல்போனை கொடுத்து அவர்களுக்கு பழக்கப்படுத்தும் நிலையை காணமுடிந்தது. எனவே, மாணவர்களுக்கு பொது அறிவை வளர்க்கக்கூடிய வகுப்புகளாக ஆன்லைன் வகுப்புகள் இருக்க வேண்டும் என கூறினோம். மேலும், ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்ட பிறகு மாணவர்களுக்கு பரீட்சை வைக்காமல் விட்டால் எப்படி என நினைத்து பொதுத்தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. அரசுக்கு பெற்றோர் மற்றும் மாணவர்கள் நலன் மீது எந்த அக்கறையும் இல்லை.
இவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை செய்து முடிக்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாக இருக்கிறது. இதேபோல், கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைவதற்கு முன்பாக இங்கிலாந்தில் பள்ளிகளை திறந்தார்கள். உருமாற்றம் அடைந்த கொரோனா தாக்கத்தால் பின்னர் அங்கு பள்ளிகளை மூடிவிட்டார்கள். மாநில அரசை பொறுத்தவரையில் நவம்பர் மாதம் பள்ளிகளை திறக்கலாம் என்றார்கள். ஆனால், பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பை அடுத்து அதை நிறுத்தினார்கள். இந்தநிலையில், பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளார்கள். கொரோனா மீண்டும் உருமாற்றம் அடைந்து பரவி வரும் சூழலில் மாநில அரசின் இந்த முடிவு ஏற்கத்தக்கதல்ல. இதை பெற்றோர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.
10, 12ம் வகுப்பு மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டம். அப்படி இருக்கும் போது டாக்டர்கள், கல்வியாளர்கள், மனநல ஆலோசகர்கள் உள்ளிட்டோருடன் தேர்வு நடத்தலாமா, வேண்டாமா என்பது குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும். கொரோனா கட்டுக்குள் வந்த பிறகு, அனைவருக்கும் தடுப்பூசி போட்ட பிறகு தேர்வை நடத்துவதே சரியான ஒன்றாக இருக்கும். இது குறித்து அரசு ஆலோசனை நடத்த வேண்டும். மே மாதம் நடத்தும் தேர்வையும் ஆகஸ்ட் மாதம் நடத்த வேண்டும். ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்ட பிறகு மாணவர்களுக்கு பரீட்சை வைக்காமல் விட்டால் எப்படி என நினைத்து பொதுத்தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. அரசுக்கு பெற்றோர் மற்றும் மாணவர்கள் நலன் மீது எந்த அக்கறையும் இல்லை.