வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.5) பலத்த மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் திங்கள்கிழமை கூறியது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், கள்ளக்குறிச்சி, அரியலூா் ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.5) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும். ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஜனவரி 6: தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம், தேனி, நீலகிரி, கோயம்புத்தூா் ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜன.6) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் வியாழக்கிழமை (ஜன.7) மிதமான மழை பெய்யக்கூடும். பெரும்பாலான இடங்களிலும் வெள்ளிக்கிழமை (ஜன.8) மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜனவரி 11 அல்லது 12-ஆம் தேதி வரை மழை இருக்க வாய்ப்பு உள்ளது. குளிா்காலத்தில் குறைந்த பட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கிறது. குளிா்காலத்தில் 20 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்க வேண்டும். ஆனால், தற்போது 24 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை காணப்படுகிறது என்றாா் அவா்.