அரசு துவக்க பள்ளிகளை இணைக்கும் முடிவையும், 3,500 சத்துணவு மையங்களை மூடுவதையும் முற்றிலுமாக கைவிட ஜாக்டோ-ஜியோ தீர்மானம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, February 21, 2023

அரசு துவக்க பள்ளிகளை இணைக்கும் முடிவையும், 3,500 சத்துணவு மையங்களை மூடுவதையும் முற்றிலுமாக கைவிட ஜாக்டோ-ஜியோ தீர்மானம்

 



'அரசு துவக்க பள்ளிகளை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும், 3,500 சத்துணவு மையங்களை மூடுவதையும் முற்றிலுமாக கைவிட வேண்டும்' என, மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜாக்டோ-ஜியோ சார்பில், மாவட்ட மாநாடு, நாமக்கல்லில் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் பழனியப்பன், ராஜேந்திரபிரசாத், அருள்செல்வன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்


செயலாளர் முத்துசாமி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொருளாளர் செல்வராஜன் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். மாநில ஒருங்கிணைப்பாளர் ரக்ஷித் சிறப்புரையாற்றினார்.


மாநாட்டில், 2003, ஏப்., 1க்கு பின் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும், பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2021ல், ஆட்சி பொறுப்பேற்று, 3 முறை அறிவிக்கப்பட்ட அகவிலைப்படியானது, 6 மாதம் காலம் கடந்து வழங்கப்பட்டது. மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படியை, மத்திய அரசு அறிவிக்கும் அதே தேதியில், நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும்.


காலவரையின்றி முடக்கிவைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், உடற்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்காமல், இழைக்கப்பட்டுவரும் அநீதி களையப்பட வேண்டும்.


அரசின் பல்வேறு துறைகளில், 30 சதவீதத்துக்கும் மேல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்க வேண்டும்.


மேலும், 3,500 அரசு துவக்கப்பள்ளிகளை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும், 3,500 சத்துணவு மையங்களை மூடுவதையும் முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




Post Top Ad