தமிழில் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் - காலத்தின் தேவை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, October 20, 2022

தமிழில் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் - காலத்தின் தேவை

 



சமீபமாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளிகளில் தரமான உலகத் திரைப்படங்களை ஒளிபரப்புகிறார்கள். பெரிய‌ ஆளுமைகளை பள்ளிகளுக்கே அனுப்பி படம் குறித்து குழந்தைகளிடம் உரையாட வைக்கிறார்கள். நல்ல முயற்சி. வகுப்பில் படங்களைக் காட்டும் போது ஏற் படும் பிரச்சினைகளில் முக்கியமானது மொழிப் பிரச்சினை. வரலாறு மற்றும் குழந்தைகள் தொடர்பான எல்லா படங்களும் பிற மொழியிலே காணக் கிடைக்கின்றன. அதனால் படத்தை உள்வாங்குவதில் குழந்தைகளுக்கு சிரமம் இருக்கும். ஒரு படம் போட்டு காட்டுவதற்கு முன்பே, அப்படத்தின் மையக்கதை, பாடத்துடன் தொடர்பு, படத்தில் எவற்றை கவனிக்க வேண்டும் ( உடைகள், நிலப்பரப்பு, உடல்மொழி, கேமரா, இசை போன்றவை) என்பதை சுருக்கமாக எடுத்துச் சொல்லிவிடுவேன். அப்படி இருந்தும் கதாபாத்திரங்கள் பேசும்மொழி புரியாது. புரியவில்லை எனில், அவ்வப்போது நிறுத்தி அர்த்தம் சொல்லுவேன்.


பெண் சார்ந்த பிரச்சினைகள்: பத்தாம் வகுப்பில் இந்தியாவில் ஏற்பட்ட சமூகச் சீர்திருத்தம் பற்றிய ஒரு பாடம் உள்ளது. பெரும்பாலும் பெண் சார்ந்த பிரச்சினைகள்தான் பேசு பொருள். அதுகுறித்து வகுப்பில் உரையாடலைத் தொடங்க. பெண் சிசுக்கொலை பற்றிய ‘கருத்தம்மா' படம் போட்டுக் காட்டினேன். நம் மொழி என்பதால் படத்தை ஒன்றிப் பார்த்தனர். அந்த இருட்டிலும் படம் பார்க்கும் போது பல விசும்பல் சத்தங்கள் கேட்டன. ஆண் குழந்தை களிடம் வழக்கத்திற்கு மாறான அமைதி இருந்ததைப் பார்க்க முடிந்தது. படம் முடிந்தும் அசையாமல் அவர்கள் உட்கார்ந்திருந்த காட்சி மறக்க முடியாது. அடுத்த நாள் படம் குறித்த தங்கள் கருத்துக்களை தெளிவாக எழுதி வந்திருந்தனர். படம் குறித்த விவாதத்தில் அனைவரும் பங்கேற்றனர். உடைத்தும் பேசினர். பெண் சிசுக்கொலை, வரதட்சணை, தங்கள் குடும்பத்துப் பெண்களின் திருமணத்திற்கு பின்பு நடந்த பிரச்சினைகள் என வெளிப்படையாகப் பேசினர். நீண்ட‌ நேரம் உரையாடல் நடந்தது. அப்படத்தின் இசை, நகைச்சுவைக் காட்சிகள், பாடல் வரிகள் என ரசித்து விவாதித்தனர். கருத்தம்மா படத்தைப் பற்றி வீடுகளில் சென்று பேசினர். அவர்களின் வீட்டு பெண்கள் அப்படம் குறித்த தங்கள் நினைவுகளைப் பேச, பாடம் வகுப்பறை தாண்டி வீடு வரை சென்றிருந்தது.


தாக்கம் ஏற்படுத்திய கருத்தம்மா:எத்தனையோ படங்கள் காட்டியிருந்தாலும், கருத்தம்மா படம் அவர்களிடம் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதை உணர முடிந்தது. ஒரே காரணம். படமும், மொழியும், நடிகர்களும், வாழ்வும், நிலமும் அவர்களுடையது. அதனாலே இயல்பாக அதனுடன் தங்களைப் பொருத்திப் பார்க்க முடிந்தது. அவர்கள் தற்போது பார்த்துக்கொண்டிருப்பது எல்லாம் பெரியவர்களுக்கான படங்கள். அதிக வன்முறையுடன், மோசமான காட்சி சித்தரிப்புகளுடன் வரும் படங்கள். குழந்தைகளுக்கான இயல்பை நம் தமிழ் படங்கள் எளிதில் உடைத்து விடுகின்றன. பல சமயங்களில் தோன்றும். ஏன் தமிழில் குழந்தைகளுக்கான படங்கள் இல்லை? அவர்களுடன் உரையாட‌ சினிமா மிக எளிமையான‌ வடிவம். உண்மையில் நாம் பொதுச்சமூகமாக இதன் மீது கவனம் செலுத்த வேண்டும்.


தமிழில் சிறார் படங்கள்: சமீபத்தில் குறைந்த பட்ஜெட்டில், கருத்தியல் படங்களுக்கான முயற்சிகள் தமிழில் நடக்கின்றன. குழந்தைகளுக்கான படங்கள் மீதும் தமிழ் திரைத்துறையினர் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். அதுவரை நமக்கான வாய்ப்பாக விரிந்து கிடக்கும் உலக சினிமாக்களை நம் பிள்ளைகள் பார்க்கட்டும். பின்னொரு நாள் வரப்போகும் குழந்தைகளுக்கான தமிழ் சினிமாவை மதிப்பிடவும் இது உதவும். தொடக்கத்திலேயே உலகப்படங்கள் பார்த்துப் பழகும் நம் பிள்ளைகளால்கூட அப்படங்கள் சாத்தியமாகட்டும் 


 - கட்டுரையாளர்: ஆசிரியை அரசு உயர்நிலைப்பள்ளி

விடத்தாகுளம். விருதுநகர் மாவட்டம்



Post Top Ad