தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்யக்கூடாது: தலைமை செயலாளர் எச்சரிக்கை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, December 6, 2020

தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்யக்கூடாது: தலைமை செயலாளர் எச்சரிக்கை

 






அரசின் ஒதுக்கீட்டு பணியிடங்களில் தற்காலிக பணியாளர்களை பணியமர்த்தக் கூடாது. விதிகளை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை செயலாளர் சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 



தமிழகத்தில் பொதுப்பணி, நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சி, வருவாய், உள்ளாட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பணியாற்றி வரும் பட்சத்தில் அவர்கள் நிரந்த பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டு வந்தனர். குறிப்பாக, துப்புரவு பணியாளர், காவலர், அலுவலக உதவியாளர், டிரைவர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் 10 ஆண்டுகள் முடித்த தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனால், இது போன்ற நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.




அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உமாதேவி வழக்கை சுட்டிகாட்டி வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சி  மற்றும் சம்பந்தப்பட்ட துறை மூலம் விளம்பரம் கொடுத்து அரசு பணிகளில் ரெகுலர் அடிப்படையில் காலி பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்று கடந்த 2017ல் உத்தரவிட்டது. இதனால், 10 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. 



மேலும், அவர்கள் நிரந்தரம் செய்வதற்கு பதிலாக பணி வரன்முறை செய்யப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில் அலுவலக உதவியாளர் டிரைவர், தூய்மை பணியாளர் பணியிடத்துக்கு நேரடி நியமனம் மூலம் நியமிக்க வேண்டியுள்ளது. ஆனால், இந்த பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிப்பதற்கு பதிலாக பிஇ, எம்இ படித்த பட்டதாரிகள் கூட விண்ணப்பிக்கின்றனர்.



குறிப்பாக, சமீபத்தில் பொதுப்பணித்துறையில் 2 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நியமிக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 4 பிஎச்டி முடித்தவர்கள், 89 எம்இ பிடித்தவர்கள், 120 பிஇ படித்தவர்கள் உட்பட பலர் விண்ணப்பித்திருந்தனர். 



இந்த பணியிடங்களுக்கு அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலனையில் எடுத்து கொள்ள வேண்டும். ஆனால், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்ததால் இந்த பணியிடங்களை நிரப்பவில்லை. இதேபோன்று பல்வேறு துறைகளில் கீழ்நிலை பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப முடியாத நிலை உள்ளது.


இந்த நிலையில், தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் அரசின் இட ஒதுக்கீட்டு இடங்களில் தினக்கூலி ஊழியர்களை பணியமர்த்தக்கூடாது. இப்பணியிடங்களுக்கு நேரடி நியமன அடிப்படையில் நியமிக்க வேண்டும்.  மாறாக, தினக்கூலி பணியாளர்களை அந்த பணியிடங்களில் நியமனம் செய்தாலோ அல்லது நியமனம் செய்வது தொடர்பாக பரிந்துரை செய்தாலோ அந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளார்.








Post Top Ad