ஓயாமல் ஒலிக்கும் போன் அழைப்புகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திண்டாடிப் போய் நிற்கிறார் பெனோ ஸெபின். மனதுக்குள் அத்தனை உற்சாகம்.. சந்தோஷம்.. சாதித்த பெருமிதம்.. எல்லாவற்றையும் தலை மேலே ஏற்றிக் கொள்ளாமல் நிதானமாக இருக்கிறார், இன்னும் சொல்லப் போனால் முன்பை விட மிகத் தெளிவாக இருக்கிறார் இந்த 25 வயது இளம் பெண்.
இவரது சாதனை அசாத்தியமானது, புதிய வரலாறு படைத்தது... 100 சதவீதம் பார்வையற்ற பெனோ, ஐஎப்எஸ் அதிகாரியாக தேர்வாகியுள்ளார். இந்திய வெளிநாட்டு சேவைப் பிரிவில் இவர் பணியமர்த்தப்பட்டுள்ளார். மேலும் 69 ஆண்டு கால மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக வரலாற்றில் முழுமையாக பார்வையற்ற ஒருவர் அதிகாரியாக வந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதுகுறித்து பெனோ கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி எடுத்திருக்கும் இந்த முடிவு மிகப் பெரியது. அதற்காக அவருக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். முழுமையாக பார்வையற்ற ஒருவர் ஐஎப்எஸ்ஸாக தேர்வாவது இதுவே முதல் முறை என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அது பெருமிதம் தருகிறது என்றார் பெனோ.
பெனோ தற்போது பாரத ஸ்டேட் வங்கியில் புரபேஷனரி அதிகாரியாக இருந்து வரகிறார். தற்போது சென்னை முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று மோட்டிவேஷனில் உரையாற்றவும் ஆரம்பித்துள்ளார்.
மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளும் பெனோவின் நியமனத்தை பாராட்டி வரவேற்றுள்ளனர். முன்னாள் இந்தியத் தூதர் டி.பி.சீனிவாசன் கூறுகையில், இது புரட்சிகரமான முடிவாகும். பணியில் பெனோவுக்கு சில சிரமங்கள் வரத்தான் செய்யும். ஆனால் நிச்சயம் அதை அவர் முறியடித்து வெல்வார் என்று நம்புகிறேன். மேலும் ஐஏஎஸ் அதிகாரிகள் போல ஐஎப்எஸ் அதிகாரிகளுக்கு களப் பணி கிடையாது. அது பெனோவுக்கு சாதகமாக இருக்கும் என்றார்.
பெனோ கூறுகையில், மத்திய அரசு என்னிடம் ஒப்படைத்திருக்கும் பொறுப்பை மிகச் சரியாக செய்ய முயற்சிப்பேன். எனது வேலையில் சாதனை படைப்பேன். கடந்த ஆண்டு நான் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியிருந்தேன். ஆனால் முடிவு தெரியாமல் இருந்து வந்தது. எனது முடிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்போதுதான் நான் அயலுறவுப் பணிக்குத் தேர்வாகியிருப்பதாக தெரிவித்துள்ளனர். மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.
நான் நிறையப் பேசுவேன். இப்போது எனது வேலையிலும் கூட நான் நிறையப் பேசும்படியாகத்தான் இருக்கும். என்ன பொருத்தம் பாருங்கள் என்றார் பெனோ சிரித்தபடி.
பெனோ சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ ஆங்கிலம் படித்தவர் ஆவார். இவரது தந்தை லூக் ஆண்டனி சார்ல்ஸ், ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாயார் மேரி பத்மஜா, இல்லத்தரசி. தாயார்தான், பெனோவுக்கு முழு ஊக்கசக்தியாக இருப்பவர். பிறவியிலேயே கண் பார்வையற்றவர் பெனோ. லிட்டில் பிளவர் கான்வென்ட்டில் பள்ளிப் படிப்பை முடித்தார்.
பிரெய்லி புத்தகம் மூலமாகத்தான் இத்தனை காலத்தைக் கடந்து வந்து சாதித்துள்ளார் பெனோ. மேலும் பார்வையற்றோருக்காக பிரத்யேமாக உருவாக்கப்பட்ட Job Access With Speech (JAWS) என்ற சாப்ட்வேரையும் பயன்படுத்தி கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் உள்ளவற்றை படிக்கும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டார். மேலும் தமிழ், ஆங்கில நூல்களை ஸ்கேன் செய்யவும் இந்த சாப்ட்வேர் மூலம் கற்றுக் கொண்டு தனது திறமையை வளர்த்து வந்துள்ளார். மேலும் ஸ்மார்ட் போனையும் பயன்படுத்த இந்த சாப்ட்வேர் மூலம் கற்றுக் கொண்டார்.
இவருக்காக புத்தகம், செய்தித் தாள்கள் உள்ளிட்டவற்றை தாயார் மேரி பத்மஜா படித்துக் காட்டுவாராம்.
பெனோ ஜெஃபைனின் இடைவிடாத முயற்சியும், உழைப்பும் தான் அவரை அரசு நிர்வாகத்தின் மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. இளங்கலை ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்ற பிறகு வங்கியில் அதிகாரியாக பணியில் சேர்ந்த பெனோ ஜெஃபைன் அத்துடன் திருப்தியடையவில்லை.
மாறாக ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம், அதைத் தொடர்ந்து முனைவர் பட்ட ஆய்வு ஆகியவற்றிலும் சாதித்தார். அதன்தொடர்ச்சியாக இந்தியக் குடிமைப் பணிகள் தேர்விலும் வெற்றி பெற்று மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார். அவரது பணி சிறக்க எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதை உணர்ந்து ஜெஃபைன் வழியில் சாதனை படைக்க மற்ற மாற்றுத்திறனாளிகளும் உறுதியேற்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் பெனோ.
No comments:
Post a Comment