அரசுப் பள்ளி ஆசிரியர்களை முதலமைச்சர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பணி அமர்த்துவதால் என்ன பயிற்சி கிடைக்கப் போகிறது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் கல்விச் சாராத பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறி, புதுவை மக்கள் தமிழ் வளர்ச்சி சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், ஆசிரியர்களை வேறு பணிக்கு அனுப்புவதால், பள்ளிகளில் பாடம் நடத்தாமல் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, புதுச்சேரி பள்ளி கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மொத்தம் 54 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கல்வி சாரா பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆசிரியர்கள் அலுவலக பயிற்சிக்காக முதலமைச்சர் அலுவலகம், சபாநாயகர் அலுவலகம், அமைச்சர் அலுவலகம் மற்றும் உள்ளிட்ட இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.
முதலமைச்சர் அலுவலகம், சபாநாயகர் அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவதன் மூலம் ஆசிரியர்களுக்கு என்ன பயிற்சி கிடைக்கப் போகிறது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வேண்டுமானால் தனியாக ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தலாமே? என கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, இன்னும் எத்தனை ஆசிரியர்கள் கல்வி சாராப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்? என்பது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய பள்ளி கல்வித் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
No comments:
Post a Comment