'ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்தக்கூடாது' என, உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
கடலுார், தர்மபுரி, கோவை, ஈரோடு மாவட்டங் களை சேர்ந்த, அரசு ஆதிதிராவிடர் நல விடுதி காப்பாளர்கள் விவேக், சேகர், சாந்தி, தாமோதரி ஆகியோர் தாக்கல் செய்த மனு:
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில், இடைநிலை ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தோம். தற்போது, இந்த துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் பணியாற்றி வருகிறோம். விடுதி காப்பாளர்கள், ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கு, சில வழிகாட்டுதல்களை வகுத்து, ஆகஸ்ட் 29ல் ஆதிதிராவிடர் நலத்துறை உத்தரவிட்டது.
இதை எதிர்த்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், '2024 - -25-ம் கல்வியாண்டில், ஏற்கனவே இருமுறை இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்ட நிலையில், மூன்றாவது முறை கவுன்சிலிங் நடத்துவதா என கேள்வி எழுப்பி, இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தக்கூடாது' என்று உத்தரவிட்டது.
இடமாறுதல் கவுன்சிலிங் நடத்துவதாக இருந்தால், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும் என்றும், ஆதிதிராவிடர் நலத்துறைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், விடுதி காப்பாளர்கள் பணிமூப்பு பட்டியலை, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் கடந்த, 7ம் தேதி வெளியிட்டுள்ளார்.
அந்த பட்டியலில், நாங்கள் பணியாற்றும் இடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆசிரியர்களை, அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரிகள் தான் இடமாறுதல் செய்ய முடியும் என்ற விதி உள்ளது. இவ்விதிகளுக்கு புறம்பாக ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர், இடமாறுதலுக்கான பணிமூப்பு பட்டியலை வெளியிட்டுள்ளார்.
மூன்றாவது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்துவதாக இருந்தால், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும் என, ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும் மீறப்பட்டுள்ளது. எனவே, ஆதிதிராவிடர் நலத்துறை, இம்மாதம், 7ம் தேதி பிறப்பித்த இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கான உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், 'இது தொடர்பாக ஆதிதிராவிடர் நலத்துறை செயலர், இயக்குனர் பதில் அளிக்க வேண்டும். ஆசிரியர்கள் இடமாறுதல் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது; தற்போதைய நிலையே தொடர வேண்டும்' என்று உத்தரவிட்டு, விசாரணையை நவ., 5க்கு தள்ளி வைத்தார்.
No comments:
Post a Comment